இந்தியா

இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி

செய்திப்பிரிவு

இன்று முதல் நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் மூன்றாம் கட்ட தடுப்பூசி பணி இன்று தொடங்கியது.

கரோனா தடுப்புக்காக கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் அவசரக்கால பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது, இரண்டாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் கொண்டவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 1ம் தேதி) முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (இணைநோய் இல்லாதோருக்கும்) தடுப்பூசி வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 6.3 கோடிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, குஜராத், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில், தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா தடுப்பூசி பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு வசதியாக, ‘கோவின்’ என்ற பெயரில் புதிய செயலி (ஆப்) ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

கரோனா தடுப்பூசி போட விரும்புபவர்கள் இந்தத் தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் இல்லையே ஆதார் அட்டையுடன் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவில் இதுவரை 1.2 கோடி பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2வது பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT