இந்தியா

மேற்கு வங்கம், அசாமில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: நந்திரகிராமில் களம் காண்கிறார் மம்தா பானர்ஜி

ஏஎன்ஐ

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் பலத்த பாதுகாப்புக்குடன் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றக் காத்திருக்கின்றனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நந்திகிராமில் நாளை (ஏப் 2) வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் இன்று தேர்தலை சந்திக்கும் 30 தொகுதிகளும் மாநிலத்தின் பஷ்சிம் மெதினிபூர், கிழக்கு மெதினிபூர், தெற்கு 24 பர்கானாஸ், பாங்குரா ஆகிய 4 மாவட்டங்களில் உள்ளன. 30 தொகுதிகளில் 8 தொகுதிகள் தனித் தொகுதிகள்.

களம் காணும் மம்தா பானர்ஜி:

30 தொகுதிகளிலும் 19 பெண்கள் உட்பட மொத்தம் 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மிக முக்கிய வேட்பாளரான முதல்வர் மம்தா, நந்திகிராமில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த சுவேந்து அதிகாரி, பாஜக சார்பில் போட்டியிடுகிறார். ஒரு காலத்தில் முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமாக இருந்த இவர், கடந்த டிசம்பரில் மம்தாவின் திரிணமூல் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். தவிர இடதுசாரி வேட்பாளர் மீனாட்சி முகர்ஜியும் இங்கு களத்தில் உள்ளார்.

மம்தாவின் அரசியல் பயணம்:


* கடந்த 2011ம் ஆண்டு மேற்குவங்கத்தின் முதல்வரானார் மம்தா பானர்ஜி. 34 ஆண்டுகாலமாக ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
* 1984ல் முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினரானார். 7 முறை எம்.பியாக இருந்தார்.
* இந்தியாவின் முதல் பெண் ரயில்வே அமைச்சர்
* முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், வாஜ்பாயி, மன்மோகன் சிங் ஆகியோருடன் பணியாற்றியிருக்கிறார்.
* கடந்த 2012ம் தேதி டைம் இதழின் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.

ம்தா, மத்திய அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளில் முன்னணியில் நிற்கிறார். ஆகையால், மேற்குவங்கத்தைக் கைப்பற்றுவதை பாஜக பெரிய பலமாகக் கருதி களம் காண்கிறது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 6, 10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் அடுத்தகட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

அசாமில் 39 தொகுதிகளில் தேர்தல்..

அசாமில் இன்று தேர்தலை சந்திக்கும் 39 தொகுதிகளில் 12 தொகுதிகள் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கான தனித்தொகுதி கள். 39 தொகுதிகளிலும் 26 பெண்கள் உட்பட மொத்தம் 345 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். இவர்களில் 5 பேர் அமைச்சர்கள், ஒருவர் துணை சபாநாயகர் ஆவார்.
மொத்தம் 73,44,631 வாக் காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 37,34,537 பேர் ஆண்கள். 36,09,959 பேர் பெண்கள். 135 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

SCROLL FOR NEXT