இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகுகளில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
லட்சத் தீவுகள் அருகேயுள்ள மினிகோய் தீவுக்கும் திருவனந்தபுரம் அருகிலுள்ள விழிஞ்சம் பகுதிக்கும் இடையே போதை மருந்து கடத்தல்கும்பலின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் கடலோர காவல் படையினர் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்தவாரம் கடல் மற்றும் வான் வழியான கண்காணிப்பு பணியின்போது சந்தேகத்துக் கிடமான 3 படகுகளை மடக்கி பிடித்தனர்.
அவற்றில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் 301 பாக்கெட்டுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள், வெடிபொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், ஹெராயின் பாக்கெட்டுகளில் பறக்கும் குதிரையின் படம் அச்சிடப்பட்டிருந்தது. இத்தகைய குறியீட்டு பரிமாற்றங்கள் கடத்தல் வர்த்தகத்தில் பின்பற்றப்படும் நடைமுறை ஆகும்.
ஈரான் நாட்டின் சாப்ஹர் துறைமுகத்தில் இருந்து இந்த போதைப்பொருட்களும் ஆயுதங்களும் கடத்தி கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இலங்கையைச் சேர்ந்த எல்.இ.நந்தனா, எச்.கே.ஜி.பி. தாஸ் பிரிய, ஏ.ஹெச்.எஸ். குணசேகர, எஸ்.ஏ.சேனாரத், டி.ரணசிங்க, டி நிசங்க ஆகியோர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று கூறும்போது, "பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது" என்றனர்.