இந்தியா

இராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு சோனியா கடிதம்

செய்திப்பிரிவு

இராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரையும் விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் சோனியா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "இராக்கில் கடத்தப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் விரைவாக ராஜதந்திர ரீதியில் எடுக்க வேண்டும். கடத்தப்பட்டவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை உறுதி செய்ய வேண்டும்.

நம் நாட்டு மக்களை பத்திரமாக விடுவித்துக் கொண்டுவர வேண்டிய முயற்சிகளில் அரசுக்கு காங்கிரஸ், தன்னால் ஆன ஆதரவை தர தயாராக உள்ளது.

அப்பாவி மக்களை கடத்தி உள்ளது தீவிரவாதிகளின் வெறுக்கத்தக்க நடவடிக்கைகளையும் கோழைத்தனத்தையும் தான் வெளிப்படுத்துகிறது. கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர் தீவிரவாதிகளின் செயலை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது" என்று அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா, "இராக்கில் இந்தியர்களை தீவிரவாதிகள் கடத்தி அதன் மூலம் அவர்களது உறவினர்களையும் வறுத்தி வருகின்றனர். இது முற்றிலும் கோழைத்தனமானது. காங்கிரஸ் இதனை பகிரங்கமாக கண்டிக்கிறது. கடத்தப்பட்டுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காங்கிரஸ் சர்வதேச தொண்டு நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT