மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை உயர் ஜாதியைச் சேர்ந்தவர் என்று கூறியிருப்பதன் மூலம் அவரும் ஜாதி அரசியல் செய்வது உறுதியாகி விட்டது, பிரதமர் மோடி, பாஜகவுக்கும் இவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்டத் தேர்தல் 27-ம்தேதி நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 கட்டத் தேர்தல் நடைபெற வேண்டும்.
2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் ஒன்றாகும். இங்கு முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த சுவேந்து அதிகாரி பின்னர் பாஜகவில் இணைந்து அக்கட்சி சார்பில் களமிறங்கியுள்ளார்.
நந்திகிராம் தொகுதியில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. 3-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் அவர் இன்று பிரச்சாரம் செய்து வருகிறார். மம்தா பானர்ஜி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் ‘‘மேற்குவங்கத்தில் எப்படியாவது ஆட்சியை கைபற்றி விட வேண்டும் என்ற வெறி கொண்டு பாஜக செயல்படுகிறது.ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள மேற்குவங்க மக்கள் பாஜகவை ஒரு போதும் ஆதரிக்க மாட்டர்கள்.
எனக்கு ஜாதி, மதத்தில் நம்பிக்கையில்லை. கடந்த 2-ம் கட்ட பிரச்சாரத்தின்போது நான் ஒரு கோயிலில் சென்று வழிபாடு நடத்தினேன். அப்போது வழிபாடு செய்வதற்காக அர்ச்சகர் எனது கோத்திரம் என எனக் கேட்டார். நான் ஒரு தாய், பெண், மனுஷி அவ்வளவு தான் எனக் கூறினேன்.
திரிபுராவில் உள்ள திரிபுரேஷ்வரி கோயிலில் சென்று வழிபாடு நடத்தினேன். அங்கும் எனது கோத்திரத்தை கேட்டபோது அவ்வாறே கூறினேன். ஆனால் உண்மையில் நான் சாண்டில்ய பிராமண கோத்திரத்தை சேர்ந்தவர்’’ எனக் கூறினார்.
இந்த விவகாரம் தேர்தல் சமயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மம்தா பானர்ஜியின் இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். தான் ஒரு உயர் ஜாதியைச் சேர்ந்தவர் என்று ஒரு முதல்வர் கூறலாமா. இவரும் வர்ணாஸ்சிரம தர்மத்தை பின்பற்றுவது தெரிந்து விட்டது. பிரதமர் மோடி, பாஜகவுக்கும் இவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருவருமே ஜாதி- மத அரசியல் செய்துகிறார்கள். இருவருமே சமமானவர்கள் தான்’’ எனக் கூறினார்.