இந்தியா

26/11 மும்பை தாக்குதல் வழக்கில் ஹெட்லி குற்றவாளி: வீடியோ கான்பரன்சிங் மூலம் விரைவில் விசாரணை

ராஹி கெய்க்வாட்

2008, நவம்பர் 26-ம் தேதி மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியை குற்றவாளியாக்கும் அரசுத் தரப்பு கோரிக்கையை மும்பை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

டிசம்பர் 10-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் வழியாக மும்பை கோர்ட்டில் ஹெட்லி வரவழைக்கப்படுகிறார். இது குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு கோர்ட் அழைப்பாணை வழங்கியுள்ளது.

26/11 மும்பை தாக்குதல் வழக்கில் லஷ்கர் தீவிரவாதி அபு ஜுண்டால் மீதான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ.சனாப், ஹெட்லியை குற்றவாளியாக்க உத்தரவு பிறப்பித்தார்.

சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகம் அக்டோபர் 8-ம் தேதி அபு ஜுண்டாலுடன் இணைத்து ஹெட்லியையும் விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் கோரிக்கை வைத்திருந்தார்.

அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு அமெரிக்க கோர்ட்டினால் 35 ஆண்டுகால தண்டனை அனுபவித்து வரும் ஹெட்லி அமெரிக்க கோர்ட்டில் மும்பை பயங்கரவாத தாக்குதலில் தனக்குள்ள தொடர்பை ஒப்புக் கொண்டார்.

மும்பை தாக்குதலுக்கு முன்பாக, ஹெட்லி மும்பைக்கு செப்டம்பர் 2006, பிப்ரவரி மற்றும் செப்டம்பர் 2007, ஏப்ரல்-ஜூலை 2008-ல் அமெரிக்க அடையாளத்தில் வந்து தாக்குதலுக்கு இலக்காக வேண்டிய பகுதிகளை வீடியோ படம் எடுத்து பாகிஸ்தான் சென்று அங்கு லஷ்கர் தீவிரவாதிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் டிசம்பர் 10-ம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஹெட்லி விசாரிக்கப்படவுள்ளார்.

SCROLL FOR NEXT