நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பல படுக்கைகளில் ஒருவருக்கு பதிலாக 2 நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
இந்தியா

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அரசு மருத்துவமனையில் - ஒரே படுக்கையில் 2 கரோனா நோயாளிகள்: சமூக வலைதளங்களில் வைரலாகும் படங்கள்

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அரசு மருத்துவமனையில் ஒரேபடுக்கையை 2 கரோனா நோயாளிகள் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு தனி வார்டு உள்ளது. இந்நிலையில் இந்த வார்டில் பல படுக்கைகளில் ஒருவருக்கு பதிலாக 2 நோயாளிகள் இருப்பது அந்த புகைப்படங்களில் தெரிய வருகிறது. இது மகாராஷ்டி ராவில் கரோனா வைரஸ் பாதிப்புஎந்த அளவுக்கு தீவிரம் அடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது, “கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவனைகளில் அதிக செலவாகும் என்பதால் பலரும் அரசுமருத்துவமனைக்கு வருகின்றனர். மேலும் மற்ற மருத்துவனைகளில் குணப்படுத்த முடியாத நோயாளிகளும் இங்கு அனுமதிக்கப்படு கின்றனர்.

இதனால் இங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எங்களுக்கு பணிச்சுமையும் அதிகமாக உள்ளது. என்றாலும் படுக்கைகளின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரித்து வருகிறோம். தற்போது ஒரு படுக்கையில் ஒரு நோயாளி மட்டுமே இருக்கிறார்” என்று தெரிவித்தனர்.

நாக்பூரில் கரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் எண்ணிக்கை கிடு கிடுவென அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை புதிதாக 3,100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதன் மூலம் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 2,21,997 ஆக உயர்ந்தது. கரோனா தொற்றுக்கு திங்கட்கிழமை 55 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மும்பையிலும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

இதையொட்டி படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அனைத்து ஐசியு படுக்கைகள் மற்றும் கரோனா படுக்கைகளில் 80 சதவீதத்தை அரசுக்கு ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT