இந்தியா

‘‘48 மணிநேரம் கவனத்துடன் இருக்க வேண்டும்’’ - நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு முடியும் வரை நான் இங்கே இருப்பேன், 48 மணிநேரம் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்டத் தேர்தல் 27-ம்தேதி நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 கட்டத் தேர்தல் நடைபெற வேண்டும்.

2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் ஒன்றாகும். இங்கு முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த சுவேந்து அதிகாரி பின்னர் பாஜகவில் இணைந்து அக்கட்சி சார்பில் களமிறங்கியுள்ளார்.

நந்திகிராம் தொகுதியில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இறுதி நாளான இன்று மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் இன்று இரண்டாவது நாளாக பாத யாத்திரை நடத்தி வருகிறார்.

அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு செல்கிறார். அவரது கட்சித் தொண்டர்களும் உடன் அணி வகுத்துச் செல்கின்றனர். நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி நடத்தி வரும் பாத யாத்திரையினிடையே மக்களிடம் பேசியதாவது:

மேற்குவங்கத்தில் எப்படியாவது ஆட்சியை கைபற்றி விட வேண்டும் என்ற வெறி கொண்டு செயல்படுகிறது. ஜனநாயகத்தில் கொஞ்சமும் நம்பிக்கையில்லாத பாஜக மற்ற கட்சிகளை ஒழித்துக்கட்டி விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள மேற்குவங்க மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள். பாஜகவை ஒரு போதும் ஆதரிக்க மாட்டர்கள்.

48 மணிநேரம் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். பிரச்சாரம் செய்தோம். கடுமையாக உழைத்தோம். அத்தடன் நாம் இருந்து விடக்கூடாது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற வேண்டும். தொண்டர்கள் அமைதியாக, பதற்றமின்றி இருக்க வேண்டும். அதேசமயம் விழப்புணர்வுடன் இருக்க வேண்டும். நானும் உங்களுடன் இருப்பேன்.

நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு முடியும் வரை நாம் அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும். வெற்றியை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT