கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று ஹோலி பண்டிகையையொட்டி மும்பை மாஹிம், தாதர் கடற்கரையில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார். படம்: பிடிஐ 
இந்தியா

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு: செயல்திட்டத்தை உருவாக்க முதல்வர் உத்தரவு

செய்திப்பிரிவு

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுகிறது. அங்கு நாளொன்றுக்கு 39 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று 40,414 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். மும்பையில் மட்டும் 6,933 பேர் பெருந் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த சூழலில், மகாராஷ்டிரா சுகாதார துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

கரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாநிலத்தின் பொருளாதாரமும் பெருமளவில் சரிந்தது. சமீபத்தில்தான் நிலைமை ஓரளவுக்கு சீரானது. ஆனால், கரோனா பரவல் மகாராஷ்டிராவில் மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. பேரிடர் சமயத்தில் ஊரடங்கை அமல்படுத்தினால், மாநிலத்தின் பொருளாதார நிலை அதல பாதாளத்துக்கு சென்றுவிடும். எனவே, அப்படியொரு சூழ்நிலை மீண்டும் உருவாகி விடக்கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமாக இருந்தது. எனினும், பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் மேலானது. ஆகவே, கரோனா பரவலைத் தடுக்க, கடைசி அஸ்திரமான ஊரடங்கை கையில் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அத்தியா வசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள், சேவைகள் பாதிக் காத வகையில், ஊரடங்கை அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை தலைமைச் செயலாளர் உருவாக்க வேண்டும். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார். இந்த உத்தரவின் மூலம் மகாராஷ்டிராவில் விரைவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT