டெல்லியில் மின்வெட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.கள் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் நிலவும் கடும் வெயில் காரணமாக மின் தடை மற்றும் தண்ணீர் பிரச்சனை அதிகமாகி வருகிறது. இங்கு கடந்த மே 30-ல் வீசிய புழுதிப்புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளன. இதனால் மேற்கு மற்றும் கிழக்கு டெல்லி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் பத்து மணி நேரம் மட்டும் மின்சாரம் கிடைப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை, கிழக்கு டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் வீட்டை 20-க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி மூத்த தலைவர் மனீஷ் சிசோதயா கூறுகையில், "டெல்லி இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநிலத்தில் மின் நிலைமை சீராக மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர்கள் சத்யேந்திர ஜெயின், சோம்நாத் பாரதி, கிரிஷ் சோனி, சவுரவ் பரத்வாஜ் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டம் அமைதியான முறையிலேயே நடைபெற்றது. இருப்பினும், போராட்டம் துவங்குவதற்கு முன்னரே அமைச்சர் வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டார்.