மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மையான வெற்றி கிடைக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிரானஅலை வீசுகிறது. அங்கு பாஜகவுக்கு நிச்சயம் பெரும்பான்மையான வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்லாமல் அசாமிலும் பாஜக தனதுஆட்சியைத் தக்க வைக்கும்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் அதிகஅளவு வாக்குகள் பதிவாகி உள்ளன. இதன்மூலம் பாஜவுக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம். தேர்தல் ஆணையம் செய்திருந்த சிறப்பான ஏற்பாடுகளால் ஏராளமான மக்கள் திரளாகவந்து வாக்களித்தனர்.
கேரளாவில் பாஜகவின் வாக்குசதவீதம் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் கூடுதல் இடங்களையும் அங்கு நாங்கள் வெல்வோம். அங்குமாற்றுக்கட்சியாக பாஜகவை மக்கள் பார்க்கிறார்கள்.
பாஜக எப்போதும் சமூகத்தைப் பிரித்தாளும் அரசியலை செய்ததில்லை. சாதி, மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் அரசியல் செய்யவில்லை. நீதி, மனிதத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே அரசியல் செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.