பெண் குழந்தை சுமை என்று உறவினர்கள் சொன்னதைக் கேட்டு என் தாய் அன்று என்னை கொன்றிருந்தால் நான் இன்று உங்கள் முன் அமைச்சராக நின்றிருக்க மாட்டேன் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
பெண் சிசுக்கொலை குறித்து மாணவர் ஒருவர் ஸ்மிரிதியிடம் கேள்வி எழுப்பினார். அந்த மாணவருக்கு பதில் அளித்த அவர் கூறியது:
"நான் இதை முதன்முறையாக பகிர்ந்து கொள்கிறேன். நான் பிறந்தபோது என் உறவினர் என் தாயாரிடம் 'பெண் குழந்தை பெரும் சுமை' எனவே அதை கொன்று விடு என கூறியுள்ளனர். ஆனால் என் தாய் மிகவும் துணிச்சலானவர். என்னை அவர் வளர்த்தெடுத்தார். அதனாலேயே நான் இன்று ஒரு அமைச்சராக இன்று உங்கள் முன் நிற்கிறேன்.
பெண் சிசுக்கொலை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஒரு பெண் குழந்தைக்கு கல்வி கற்று கொடுப்பது ஒரு குடும்பத்திற்கே கல்வி கற்பிப்பதற்கு சமம். பின்நாளில், பெண் கல்வியால் தேசம் பலப்படும்" என்றார்.
ஒவ்வொரு மாநில்த்திலும் ஒவ்வொரு பாடத்திட்டம் பின்பற்றப்படுவது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "இப்பிரச்சினைக்கு தேசிய கல்வி கொள்கை தீர்வு காணப்படும். நாட்டில் வேலைவாய்ப்பின்மையை கலைய, திறன்மேம்பாடுசார் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஆசிரியர்கள் தரமாக கல்வி பயிற்றுவிக்க பயிற்சி அளிக்கப்படும்" என தெரிவித்தார்.
ஏழ்மை தடையல்ல
வாழ்வில் முன்னேற குடும்பத்தின் ஏழ்மை நிலை நிச்சயம் தடையாக இருக்காது என மாணவர்களை ஊக்குவித்தார். டீ விற்பவராக இருந்தவர்தான் இப்போது இந்த தேசத்தின் பிரதமராக உள்ளதையும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தான் தற்போது அமைச்சராக இருப்பதையும் சுட்டிக்காட்டி மாணவர்களுக்கு ஊக்கமளித்தார் அமைச்சர் ஸ்மிருதி இரானி.