ஷீனா போரா கொலை வழக் கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்தி ராணியும், அவரது கணவர் பிட்டர் முகர்ஜியும் வெளிநாடுகளில் ரூ.900 கோடி முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே பீட்டரின் சிபிஐ காவல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பீட்டர் முகர்ஜி கடந்த 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை நேற்று வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து பீட்டரை டெல்லிக்கு அழைத்துச் சென்று 2 நாட்களாக விசாரணை நடத்தினர்.
அவரது காவல் முடிந்ததை யடுத்து, நேற்று காலையில் அவரை மும்பைக்கு அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், அவரது காவலை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பீட்டரின் காவலை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி ஆர்.வி.அடோன் நேற்று உத்தரவிட்டார்.
முன்னதாக, சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் நீதிமன்றத்தில் கூறும்போது, “இந்த கொலைக்கு பணப்பரிமாற்றமும் ஒரு காரணமாக இருக்கும் என்ற கோணத்தில் பீட்டரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அந்த வகையில், இந்திராணியும், பீட்டரும் கடந்த 2006-07-ல் பல்வேறு நிறுவனங்களை தொடங்கி அதில் ரூ.900 கோடி முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, அவர்கள் நடத்திய ஐஎன்எக்ஸ் நிறுவனத்திலிருந்து ஹாங்காங், சிங்கப்பூரில் உள்ள எச்எஸ்பிசி உள்ளிட்ட சில வங்கிக் கிளைகளில் ஷீனா பெயரில் உள்ள கணக்குக்கு பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டு வங்கிக் கிளைகளில் இவர்களுக்கு உள்ள கணக்குகளை திறக்க உதவுமாறு இன்டர்போலுக்கு கடிதம் எழுதி உள்ளோம்” என்றார்.