முதல் கட்டத் தேர்தலில் அசாமில் 37 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 26 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என்று நம்புகிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. தமிழகம் உள்பட 3 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது.
இந்நிலையில் முதல் கட்டமாக அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடந்தது. முதல் கட்டத்தில் ஏறக்குறைய 79 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தனது இல்லத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக நடந்த 30 தொகுதிகளுக்கான தேர்தலில் 26 இடங்களை வெல்வோம். அசாமில் 47 தொகுதிகளில் 37 தொகுதிகளைக் கைப்பற்றுவோம். எங்களுக்குக் களத்தில் இருந்து எங்கள் கட்சியினர் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இதைத் தெரிவிக்கிறேன்.
இரு மாநிலங்களிலும் தேர்தல் அமைதியாகவும், அதிகமான சதவீதத்திலும் வாக்குப்பதிவு நடந்தது சாதகமான விஷயம். இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் தேர்தல் நடத்திக் கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
மேற்கு வங்கத்திலும், அசாம் மாநிலத்திலும் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். மேற்கு வங்கத்தில் 200 இடங்களையும், அசாம் மாநிலத்தில் கடந்த முறையையும் விடச் சிறப்பான இடங்களைப் பெற்று ஆட்சி அமைப்போம்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதி மக்கள் மாற்றத்துக்காகவும், மாநிலத்தின் எதிர்காலத்துக்காகவும் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.
வங்கதேசத்துக்குப் பிரதமர் மோடி சென்றதற்கும், மம்தா பானர்ஜி விமர்சித்ததற்கும் தொடர்பில்லை. இரு நாடுகளின் நட்புறவை வளர்க்கும் வகையில் பிரதமர் மோடியின் பயணம் அமைந்துள்ளது. இதைத் தேர்தலோடு தொடர்புப்படுத்தக் கூடாது''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.