இந்தியா

கேரள தேர்தல் களத்தில் குரலற்றவர்களின் குரல் கவனிக்கப்படுமா?- பூச்சிக்கொல்லி மருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் காத்திருப்பு

என்.சுவாமிநாதன்

கேரள மாநிலத்தில் 1978 முதல் 2001-ம் ஆண்டு வரை காசர்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் அரசு முந்திரித் தோட்டங்களில் ஹெலிகாப்டர் மூலம்' எண்டோசல்பான்' எனும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. காற்றில் இந்த பூச்சிக்கொல்லி மருந்து பரவி அப்பகுதி முழுக்கவே நோயாளிகளின் கூடாரமாக மாறிப்போனது.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் என இருகட்சிகளின் ஆட்சியிலும் எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தேர்தல் களத்திலும் சபரிமலை விவகாரம் தொடங்கி, தங்கக் கடத்தல் வழக்கு வரை பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் கேரளா, எண்டோசல்பான் விவகாரத்தை பேசவில்லை.

எண்டோசல்பானால் பாதிக்கப் பட்ட மக்கள் இந்தத் தேர்தலில் எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் என்பதில் 5 தொகுதிகளின் முடிவு களும் அடங்கியிருக்கிறது.

காசர்கோடு பகுதியில் மாநில அரசுக்கு சொந்தமான 4,700 ஏக்கர் முந்திரி காடுகளில் ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்ஃபான் தெளிக்கப்பட, அந்தப் பகுதியே நோயாளிகளின் பூமியாகிவிட்டது. பாலக்காடு மாவட்டத்தில் மாம்பழத் தோட்டங்களிலும் விவசாயிகளால் அதிக அளவில் ‘எண்டோசல்பான்' தெளிக்கப்பட்டது.

இவை அப்பகுதி நீர் ஆதாரங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பரவியது. இதன் விளைவு, அப்பகுதி மக்கள் உடல் குறைபாடு உடையவர்களாகவும், புற்றுநோயாளிகளாகவும் மாறினர்.

அந்தப் பகுதிகளில் இப்போது பிறக்கும் குழந்தைகளும் குறை பாட்டுகளுடனேயே பிறக்கின்றனர். இதில் காசர்கோடு மாவட்டம் அதிக அளவிலும், அதற்கு அடுத்த நிலையில் பாலக்காடு மாவட்டமும் பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்து, மக்கள் போராட ஆரம்பித்த பிறகு, விபரீதத்தை உணர்ந்த கேரள அரசு, உடனடியாக எண்டோசல்பானுக்கு தடை விதித்தது.

கடந்த 2011-ம் ஆண்டில், முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் நாடு முழுவதும் எண்டோ சல்பானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார். இதில் கேரளத்தில் உள்ள பல அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், நாடு முழுவதும் எண்டோசல் பானுக்கு 2011-ம் ஆண்டு மே 13-ம் தேதி இடைக்காலத் தடை விதித்தது. கேரள மாநிலத்தையே உலுக்கிய எண்டோசல்பானால் பாதிக்கப் பட்டோருக்கு உரிய இழப்பீடு, மருத்துவ உதவிகள், நிவாரணம் ஆகியவற்றை வழங்கதேசிய மனித உரிமை ஆணையம்கேரள அரசுக்கு உத்தரவிட்டி ருந்தது.

அதன்படி, இந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டதனால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம், நிரந்தரப் படுக்கை நோயாளிகளுக்கு ரூ. 5 லட்சம், சிறிய அளவில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைப் பட்டியல் நீள்கிறது.

ஆனால் இந்த விஷயங்களை கேரள அரசு செய்து தரவில்லை. இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் இப்போது எண்டோசல்பான் விவகாரத்தையே கைகழுவி விட்டனர்.

எண்டோசல்பான் பாதிப்புக்கு உள்ளான மக்கள் முன்னணியின் நிர்வாகி குன்கி கிருஷ்ணன் இந்து தமிழ் திசையிடம் கூறியதாவது:
எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் நரம்பியல் நிபுணர்களை நியமிக்க நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பலருக்கும் வலிப்புநோய் இருக் கிறது. மூளையின் செயல்திறனைக் கணிக்கும் வகையில் இ.இ.ஜி மையம் கேட்டும்அரசு அமைத்துத் தரவில்லை. எண்டோசல்பானால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு காசர்கோட்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை அமைக்க கோரியும் இதுவரை அமைக்கப்படவில்லை.

எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டோர் 17 மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற முடியும். அது திருவனந்தபுரம், கோழிக்கோடு அண்டைமாநிலமான கர்நாடகத்தின் மங்களூர் என பரவிக் கிடக்கிறது. கரோனா கால கட்டத்தில் அங்கெல்லாம் சென்று சிகிச்சை பெறும் சூழல் இல்லாமல் தவித்தோம். பாதிக்கப்பட்டு படுக்கையில் இருப்போருக்கும், மாற்றுத்திறனாளிகளாக மாறியவர்களுக்கும் மாதம் ரூ.2,200 ஓய்வூதியத்தை அரசு அறிவித்தது. ஆனால் ரூ.1,700 மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த பாதிக்கப்பட்ட அனை வருக்கும் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் கூட அனைவருக்கும் கிடைக்கவில்லை. பாதிப்புக்கு உள்ளாகாத சிலரும் உதவித் தொகை பெறுவதாக கூறி மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்த இருப்பதாக சொல்கிறார்கள். இதை சொல்லி, பயனாளிகளின் எண்ணிக்கையையும் குறைக்க பார்க்கிறார்கள்.

காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் 6,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோர் மட்டுமின்றி அவர்களது குடும்ப வாக்குகளும் இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடுமா தொகுதியின் மார்க்சிஸ்ட் வேட்பாளர் குன்ஹாம்பு இது குறித்து கூறுகையில், ‘எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுதானந்தன் காலத்தில் இருந்தே நிவாரணமும், வாழ்க்கை புனரமைப்புத் திட்டங்களும் செயல் படுத்தப்பட்டு வருகிறன்றன. தகுதியானவர்களுக்கு உரிய நிவாரணமும், இழப்பீடும் கிடைக்க எப்போதுமே இடதுசாரிகள் துணை நிற்போம். நியாயமான பயனாளிகளை குறைக்க முயற்சிப்பதாக வரும் தகவல் தவறானது’’ என்றார்.

கடந்த 2016 தேர்தலில் எண்டோசல்பான் விவகாரம் முக்கிய பங்கு வகித்தது. இந்தத் தேர்தலில் இடதுசாரிகளும், பாதிக்
கப்பட்டோரின் மருத்துவச் செலவுக்கு ஏற்பாடு செய்வதாக பாஜகவும் கூட்டத்தோடு கூட்டமாக இவ்விவகாரத்தை மேம்போக்காக பேசினர்.

அரசாங்கம் செய்த தவறினால், உடல் குறைபாட்டை சுமந்துகொண்டு, வாழ்க்கை புனரமைப்பை எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர் எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டவர்கள்.

SCROLL FOR NEXT