இந்தியா

ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரம்; சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு இடமில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

செய்திப்பிரிவு

மியான்மரில் ராணுவ நடவடிக்கைக்கு பயந்து ரோஹிங்கியாமுஸ்லிம்கள் ஆயிரக்கணக் கானோர். இந்தியாவின் ஜம்மு,உத்தர பிரதேசம், ஹரியாணா, டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் குடியேறினர். அவர்களை இனம் கண்டு திருப்பி மியான்மர் அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அத்துடன், சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியாக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜம்மு முகாமில் உள்ள ரோஹிங்கியாக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களை மியான்மர் அனுப்புவது தொடர்பான எந்த உத்தரவையும் மத்திய அரசு அமல்படுத்த கூடாதுஎன்று உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அகதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முகமது சலிமுல்லா என்ற ரோஹிங்கியா முஸ்லிம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரித்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:

இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் இல்லை. அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். இதுதொடர்பாக ஏற்கெனவே தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நாங்கள் சட்டத்தை பின்பற்றுகிறோம். அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்.

மியான்மர் அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தங்கள் நாட்டு பிரஜைகள்தான் என்று மியான்மர் உறுதி செய்த பிறகு அவர்களை அங்கு அனுப்புவோம். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை மியான்மருக்கு அனுப்பி வைக்கமாட்டோம்.

இவ்வாறு துஷார் மேத்தா கூறினார்.

SCROLL FOR NEXT