நாட்டின் சகிப்புத்தன்மையற்ற போக்கு குறித்து பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தனது கருத்தை பதிவு செய்த 2 நாட்களுக்குப் பிறகு, அவரை பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீதுடன் ஷாரூக்கானை ஒப்பிட்ட யோகி ஆதித்யநாத், ஷாரூக்கான் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்றார்.
“நாட்டில் உள்ள அவரது பெரும்பான்மையான ரசிகர்கள் கூட்டம் அவரது படங்களை புறக்கணித்தால் அவரும் கூட ஒரு சாதாரண முஸ்லிமாக தெருக்களில் அலைய வேண்டியதுதான்.
மதச்சார்பின்மை என்ற பெயரில் சிலர் தீவிர கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர், இவர்கள் தேச -விரோதிகளாகவே பேசி வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக அவர்களது எதிர்ப்புக்கு தனது ஆதரவுக்குரலை ஷாரூக்கான் தெரிவித்து தவறிழைக்கிறார்.
நான் கூறுகிறேன், இவர்கள் பயங்கரவாதிகளின் மொழியில் பேசுகின்றனர். ஷாரூக்கானின் மொழிக்கும் ஹபீஸ் சயீதின் மொழிக்கும் அதிக வித்தியாசமில்லை.
இவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதை வரவேற்கிறோம். இந்தியாவின் பெருமையை சீர்குலைப்பவர்களுக்கு அப்போதாவது புரியும்” என்று ஆவேசப்பட்டார்.
செவ்வாயன்று மூத்த பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா தொடர் ட்விட்டர்களில் ஷாரூக்கானை தாக்கினார். ஷாரூக் கான் தேச விரோதி என்றும், அவர் இந்தியாவில் வாழ்ந்தாலும் அவரது ஆன்மா பாகிஸ்தான் வசமே உள்ளது என்றும் சாடியிருந்தார்.
அதன் பிறகு விஜய்வார்கியா மீது கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து தனது கருத்துகளை அவர் வாபஸ் பெற்றார். ஆனாலும், இந்தியாவில் சகிப்பின்மை இல்லையெனில் அமிதாபுக்குப் பிறகு ஷாரூக்கான் புகழ் பெற்ற நடிகராக வலம் வரமுடியாது என்று தெரிவித்தார்.
கருத்துகளை அவர் திரும்ப பெற்றாலும் அதற்காக மன்னிப்பு கேட்க மறுத்தார் விஜய்வர்கியா.
யோகி ஆதித்யநாத் மற்றும் விஜய்வர்கியா கருத்துகளை கண்டித்த காங்கிரஸ் கட்சியின் டாம் வடக்கன், எதிர்ப்போர் அனைவரும் பாகிஸ்தானுக்குச் சென்று விட வேண்டும் என்றால், இவர்கள் என்ன பாகிஸ்தான் சுற்றுலாவை வளர்த்தெடுக்க பாடுபடுபவர்களா? என்று குத்தலாக கேட்டுள்ளார்.
நாட்டில் ‘தீவிர சகிப்பின்மை’ நிலவுகிறது என்று ஷாரூக்கான் கூறியதையடுத்தே இத்தகைய சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.