கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தொடங்கியுள்ள நிலையில், விமானப் போக்குவரத்து குறைக்கப்படுமா என்பதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''ஏர் இந்தியா விமானத்தின் பங்குகளை விற்பனை செய்யும் பணி மே மாதம் இறுதிக்குள் முடிந்துவிடும். வரும் திங்கள்கிழமை முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஏர் இந்தியா விமானத்துக்கான விலை கேட்டுள்ளவர்களின் பட்டியல் குறித்து அந்தக் கூட்டத்தில் உறுதி செய்யப்படும். இது தவிர பொதுத்துறை நிறுவனமான பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படும். தற்போது ஏர் இந்தியா விமானத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், விமானப் போக்குவரத்து சேவையைக் குறைக்கும் திட்டம் மத்திய அரசுக்கு ஏதும் இல்லை. கரோனா வைரஸ் பரவலின்போது குறைக்கப்பட்ட விமானச் சேவையை மீண்டும் முழுமையாக இயக்கவே அரசு திட்டமிட்டு வருகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதற்கான பணியைத் தொடங்க உள்ளது.
ஆதலால், விமானப் போக்குவரத்துச் சேவையைக் குறைக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை. தற்போது 80 சதவீத விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை 100 சதவீதமாக முழுமையாக இயக்க முயல்வோம். இப்போது கரோனா வைரஸ் 2-வது அலை இருப்பதால், 100 சதவீதம் இயக்க முடியாது. ஆனாலும், படிப்படியாகச் சேவை அதிகரிக்கப்படும்.
கரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத பயணிகளை கறுப்புப் பட்டியலில் வைக்கக் கோரி விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இதன்படி முகக்கவசம் அணியாத பயணிகள், சமூக விலகலைக் கடைப்பிடிக்காத பயணிகள் விமானத்தில் பயணிக்கத் தகுதியற்றவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்''.
இவ்வாறு ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.