இந்தியா

திருப்பதியில் நிலச்சரிவு மலைப்பாதை மூடப்பட்டது

செய்திப்பிரிவு

பலத்த மழை காரணமாக திருப்பதி மலைப்பாதையில் தொடர்ந்து குன்றுகள் சரிந்து விழுவதால், 4 நாட்களுக்கு 2-வது மலைப்பாதை மூடப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதியில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் இது போன்ற தொடர்மழை பெய்து வருவதால், குமாரதாரா, பசுபுதாரா, கோகர்பம், ஆகாச கங்கை, பாப விநாசம் அணைகள் நிரம்பின. கடந்த திங்கள்கிழமை மட்டும் திருமலையில் 300 மி.மீ அளவு மழை பெய்தது. இதன் காரணமாக திருப்பதியில் இருந்து திருமலை செல்லும், 2வது மலைவழிப்பாதையில், பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. குன்றுகள் சரிந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் உத்தரவின்பேரில் போர்க்கால அடிப்படையில் கிரேன் கள், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் விழுந்த மரங்களும், குன்றுகளும் அகற்றப்பட்டன. ஆயினும் ஆங்காங்கே குன்றுகள் சரிவதால், பாதை மூடப்பட்டது. இன்று முதல் 3 நாட்களுக்கு மாற்று பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், இரவு 10 முதல் காலை 5 மணி வரை வாகனங்கள் மலைக்கு அனுமதிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளனர். இன்று சென்னை, பெங்களூரிவிலிருந்து வரும் நிபுணர் குழு மலைப்பாதைகளை ஆய்வு செய்ய உள்ளது.

SCROLL FOR NEXT