மேற்கு வங்கம் மற்றும் அசாமில் 77 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதேபோல் தமிழகத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவும் நேற்று முதல் தொடங்கியது.
தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாமில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை 3 கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடை பெறுகிறது.
இதன்படி அசாமில் 47 தொகுதிகளும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளும் என 77 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. வாக்குப் பதிவு சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய் துள்ளது. தொலைதூரப் பகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ளிட்ட சாதனங்கள் நேற்றே அனுப்பி வைக்கப்பட்டன.
முகக்கவசம் கட்டாயம்
தற்போது கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில் வாக்காளர்கள் முகக் கவசம் அணிவது, கிருமி நாசினி வழங்கல், உடல் வெப்ப பரிசோதனை, சமூக இடைவெளி போன்ற கரோனா தடுப்பு விதிமுறைகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் மாநில போலீஸாருடன் மத்தியப் படையினரும் ஈடுபட உள்ளனர்.
களத்தில் 455 பேர்
மேற்கு வங்கத்தில் இன்று தேர்தலை சந்திக்கும் 30 தொகுதிகளும் ஒரு காலத் தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜங்கல் மெஹல் பிராந்தியத்தில் உள்ளன. இங்கு திரிணமூல் காங்கிரஸ், பாஜக சார்பில் தலா 29 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 18 பேர், காங்கிரஸ் சார்பில் 6 பேர், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 4 பேர், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் 2 பேர் உட்பட மொத்தம் 191 பேர் களத்தில் உள்ளனர்.
அசாமில் இன்று தேர்தலை சந்திக்கும் 47 தொகுதிகளும் சோனித்பூர், விஸ்வ நாத், நாகாவ்ன், கோலாகட், ஜோர்கத், சிவசாசர், லக்கிம்பூர் தேமாஜி, திப்ரூகர், தின்சுகியா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 264 பேர் களத்தில் உள்ளனர்.
அசாம் முதல்வர் சர்வானந்த சோனா வால், மாநில காங்கிரஸ் தலைவர் ரூபன் போரா, அசாம் கனபரிஷத் தலைவர் அதுல் போரா, செயல்தலைவர் கேஷவ் மகந்தா உள்ளிட்டோர் முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் முக்கிய தலைவர் கள் ஆவர்.
அசாமில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தேர்தல் முறையே வரும் ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ளது. இதுபோல் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 1, 6, 10, 17, 22 26, 29 ஆகிய தேதிகளில் அடுத்தகட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தபால் வாக்கு
வாக்குச் சாவடிகளுக்கு வர சிரமப்படும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதி இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மார்ச் 16-ம் தேதி வரை, தேர்தல் அலுவலர்கள் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று, தபால் வாக்கு அளிப்பதற்கான விருப்ப படிவத்தை (12டி) பூர்த்தி செய்து பெற்றுக்கொண்டனர்.
இதன்தொடர்ச்சியாக வாக்காளர் களின் வீடுகளுக்குச் சென்று, அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில், தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கி, அவர்கள் ரகசியமாக வாக்களிப்பதை உறுதி செய்து, பெற்றுக்கொள்ளும் பணி நேற்று தொடங்கியது.
இதுதொடர்பாக மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 38,497 வாக்காளர்கள் தபால் வாக்கு அளிக்க உள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட் டத்தில் 11,464 பேர், குறைந்தபட்சமாக தேனி மாவட்டத்தில் 562 பேர் தபால் வாக்கு அளிக்க உள்ளனர். இப்பணி களை ஏப்ரல் 5-ம் தேதி வரை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 105 தொகுதிகள் செலவின பதற்றம் நிறைந்த தாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
விபத்தில் இறந்த சிவகங்கை தொகுதி பறக்கும் படையினர் 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சமும் படுகாயமடைந்த இருவருக்கு தலா ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இதுவரை ரூ.293 கோடி மதிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.