இந்தியா

தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் ‘பேஸ்புக்’ உதவியுடன் பெங்களூரில் கைது: இன்று மேகாலயா அழைத்துச் செல்லப்படுகிறார்

செய்திப்பிரிவு

கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் முக்கிய‌ தலைவரை, போலீஸார் முகநூல் மூலம் கண்காணித்து கைது செய்துள்ள‌னர்.

மேகாலயா மாநிலத்தின் அஷ்கி பாட்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரபியுஷ் சங்மா (36). இவர் கடந்த 2013 பிப்ரவரி மாதம் நடந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் சார்பாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசால் தடைசெய்யப்பட்ட கெரோ தேசிய விடுதலைப் படையில் இணைந்து துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.

அதன் பிறகு ரபியுஷ் சங்மா, கெரோ மலைகளில் தலைமறைவாக இருந்ததாகத் தெரிகிறது. அப்போது மேகாலயாவில் நடந்த குண்டுவெடிப்பு, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல விவகாரங்களில் அவர் ஈடுபட்டதாக போலீஸார் வழ‌க்கு பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரில் சொகுசு வாழ்க்கை

கடந்த ஓராண்டாக மேகாலய மாநில போலீஸாரால் தேடப்பட்டுவந்த சங்மா, செவ்வாய்க்கிழமை பெங்களூரில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அங்கு குடும்பத்தோடு வசித்த அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள், 20 சிம் கார்டுகள், 7 ஏ.டி.எம். அட்டைகள் உட்பட பல்வேறு ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தனிப்படை காவல்துறை ஆய்வாளர் ஜி.எச்.பி. ராஜு கூறுகையில், "ரபியுஷ் சங்மா பெங்களூரில் தங்கி இருப்பதாக மேகாலயா போலீஸார் கடந்த வாரம் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து கடந்த 7 நாட்க‌ளாக தேடி வந்தோம்.

அப்போது அவர் கோரமங்களாவில் வசிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சங்மாவை கைது செய்து, பெங்களூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். வியாழக்கிழமை மேகாலயா போலீஸார் அவரை அங்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். அதன்பிறகு கர்நாடக போலீஸார் சங்மாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்''என்றார்.

காட்டிக்கொடுத்த முகநூல்

சங்மாவை மடக்கி பிடித்தது எப்படி என காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தோம். "ரபியுஷ் சங்மா தலைமறைவாக இருந்தபோதும் மின்னஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

அதனைத் தொடர்ந்து கண்காணித்தபோது அவர் எங்கெங்கு செல்கிறார் என்பது தெரியவந்தது.

ஒரு கட்டத்தில் போலீஸார் தன் முகநூல் கணக்கை கண்காணிப்பதை தெரிந்துகொண்ட சங்மா, வேறொரு பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி இயங்கி வந்தார். அதில் அடிக்கடி அவரது அமைப்பு தொடர்பான செய்திகளைப் போடுவதும், தன்னுடைய படங்களை வெளியிடுவதுமாக இருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் மும்பை சென்ற அவர், 2 மாத‌ங்களுக்கு முன்பு குடும்பத்துடன் பெங்களூர் வந்தார். கடந்த மே 31-ம் தேதியும், ஜூன் 14-ம் தேதியும் தனது படங்களை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்தே போலீஸார் அவரை கண்காணித்து கைது செய்தனர்''என்றனர்.

SCROLL FOR NEXT