5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அமைப்பு சார்பில் கடந்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தேர்தல் நிதிப் பத்திரங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை. அரசியல் கட்சிகள் பெறும் நிதியிலும், வங்கிக்கணக்கிலும் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதால், தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்வதை நிறுத்த உத்தரவிட வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனைக்குத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் 5 மாநிலத் தேர்தல் வரும் 27-ம் தேதி முதல் படிப்படியாகத் தொடங்கும் நிலையில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை ஏப்ரல் 1-ம் தேதி மற்றும் 10-ம் தேதி நடக்கிறது. இந்த விற்பனையை தொடங்கக்கூடாது எனக் கேட்டு ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அமைப்பு சார்பில் புதிதாக ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ் போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
ஏடிஆர் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நேஹா ரதி வாதிடுகையில், "தேர்தல் நடப்பதற்கு முன்பாக, தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்வது பெரிய கவலைகளை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் மேலும், சட்டவிரோதமான, தவறான வழியில் திரட்டப்பட்ட பணம் போலியான நிறுவனங்கள் மூலம் அரசியல் கட்சிக்குச் செல்லும்" எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், வாதிடுகையில் ," தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பின்புதான் நடக்கிறது" எனத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் துவேதி வாதிடுகையில், "தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனையை தேர்தல ஆணையம் வரவேற்கிறது. இந்த திட்டத்தைக் கைவிட்டால், கடந்த காலம்போல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை ரொக்கப் பணமாக வரும்" எனத் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தில், "அரசியல் கட்சிகள் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடையாகப் பெறும் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா எனக் கவலை தெரிவித்திருந்தது. ஆனால், தேர்தலில் குறிப்பிட்ட சதவீதம் வாக்கு பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற முடியும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ் போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், "ஏப்ரல் 1 மற்றும் 10-ம் தேதி நடக்கும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனைக்குத் தடை விதிக்க முடியாது" எனத் தீர்ப்பளித்தனர்.