இந்தியா

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி முழுஅடைப்புப் போராட்டம்: டெல்லி, பஞ்சாப், ஹரியாணாவில் போக்குவரத்து பாதிப்பு

ஏஎன்ஐ

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறக்கோரி இன்று காலை தொடங்கிய முழு அடைப்புப் போராட்டத்தால் டெல்லி, பஞ்சாப், ஹரியாணாவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்களை வாபஸ் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே 10 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கடந்த டிசம்பர் 8-ம் தேதி விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின நாளில் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது பெரும் வன்முறை ஏற்பட்டது.

இதன்பிறகும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு சம்யுக்த் விவசாயிகள் மோர்சா (எஸ்.கே.எம்) விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இன்று காலையிலேயே போராட்டத்தைத் தொடங்கினார். மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள், டாக்ஸிகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகங்கள் இயங்கவில்லை. பஞ்சாபில் மட்டும் 120 இடங்களில் மறியல் நடைபெற்றுவருகிறது.

தலைநகர் டெல்லியில், காசிபூர் எல்லையில் தேசிய நெடுஞ்சாலை 24ஐ போலீஸார் மூடிவிட்டனர். இந்த எல்லையில், கடந்த 4 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காசிபூர் எல்லை மூடப்பட்டதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்றுவந்தன. ஆனால், இன்றைய முழுஅடைப்பை ஒட்டி விவசாயிகள் அந்தப் பாதையையும் மூடினர். டெல்லியில் 5 பகுதிகளைப் பதற்றமான பகுதிகளாக அடையாளம் கண்டு அப்பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதோடு, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும், விவசாயிகளுக்கான மின் கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும், விவசாயக் கழிவுகளை எரித்தால் கிரிமினல் வழக்கு போடப்படும் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT