மதுரையில் எய்ம்ஸ் சிறப்பு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா 2019-ல் முடிந்த பிறகும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இதற்கு அதற்கான நிர்வாகக்குழு அமைக்கப்படாமல் இருப்பதும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. நாட்டிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான சட்டம் 1959-ன் படி, அதன் ஒவ்வொரு மருத்துவமனையின் நிர்வாகக் குழுவிலும் இரண்டு எம்.பி.க்களும் நியமிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸுக்கு 2 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பை நாடாளுமன்றம் கடந்த பிப்ரவரி 12-ல் வெளியிட் டது. மக்களவை உறுப்பினர்களில் மதுரையின் சு.வெங்கடேசன், விருதுநகரின் மாணிக்கம் தாகூர், தேனியின் ஓ.பி.எஸ்.ரவீந்திரநாத் ஆகியோர் இப்பதவிக்கு நாடாளு மன்றத்தில் மனு தாக்கல் செய் திருந்தனர்.
நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பு மூலம் தேர்தல் நடைபெறவிருந்தது. இந்நிலையில் கடைசி நேரத்தில் சு.வெங்கடேசன் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதனால், காங்கிரஸின் கொறடாவான மாணிக்கம் தாகூரும், அதிமுகவின் ஒரே மக்களவை எம்.பி.யான ரவீந்திரநாத்தும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இதற்கான அறிவிப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாளான நேற்று வெளியாகி உள்ளது.
இதன்மூலம், அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பு நிர்வாகிகளும் தேர்வாகி விட்டதால் இனி, மதுரையில் எய்ம்ஸ் பணி விரைந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.