ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியிடம் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக 5 மணி நேரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டபின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கடந்த ஆண்டு கரோனா வைரஸ் லாக்டவுனுக்கு முன்பாக வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்குத் தொடர்பாக விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவு, பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி நேரில் டெல்லி அலுவலகத்தில் மார்ச் 15-ம் தேதி ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அமலாக்கப் பிரிவு வழங்கிய நோட்டீஸுக்குத் தடை விதிக்கக் கோரி, பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனால் கடந்த 15-ம் தேதி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் மெகபூபா முப்தி நேரில் ஆஜராகவில்லை.
இந்தச் சூழலில் வரும் 22-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கப் பிரிவு சார்பில், மெகபூபா முப்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அமலாக்கப் பிரிவு நோட்டீஸுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் இன்று மெகபூபா முப்தி நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.
மெகபூபா முப்தியிடம் ஏறக்குறைய 5 மணி நேரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த நிலையில் பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''மத்திய அரசை யாரேனும் எதிர்த்தால் அவர்கள் மீது ஏதாவது குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளியாக்கி விடுகிறது. அதாவது தேசத்துரோக வழக்கு அல்லது சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்குப் போடுகிறார்கள். இந்த நாட்டில் எதிர்க்கருத்து என்பது குற்றமாக்கப்படுகிறது. அமலாக்கப் பிரிவு, சிபிஐ, என்ஐஏ அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு எதிர்க்கட்சிகளை மவுனமாக்குகிறார்கள்.
இந்த தேசம் அரசியலமைப்புச் சட்டப்படி ஆளப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் திட்டப்படி ஆளப்படுகிறது. என்னுடைய முன்னோர்கள் நிலம் ஆனந்த்காக் மாவட்டத்தில் பிஜிபேந்திரா பகுதியில் இருக்கிறது. அதை நான் விற்பனை செய்திருந்தேன். அதுபற்றி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்னிடம் கேள்வி எழுப்பினர்.
அந்த நிலம் முதல்வரின் நிவாரண நிதிக்காக ஒப்படைக்கப்பட்டது எனத் தெரிவித்தனர். ஆனால், அதை மறுத்தேன். என்னுடைய கரங்கள் கறைபடியாதவை எனத் தெரிவித்தேன்.
என்னுடைய கட்சி தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு உரிமை வழங்கவும், மாநிலத்தின் பிரச்சினைக்காகவும் குரல் கொடுக்கும்".
இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்தார்.