இந்தியா

ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் நிறுவனத்திற்கு தொடரும் சிக்கல்: தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வழங்கப்படாத தமிழக அரசின் ரூ.1 கோடி காசோலை

ஆர்.ஷபிமுன்னா

ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழியல் ஆய்வு நிறுவனம் 1963-ல் துவக்கப்பட்டது. இந்த ஆய்வு நிறுவனத்தை தமிழறிஞர் க்ளவுஸ் லுட்விட் ஜெனரட் எனும் ஜெர்மானியர் நிறுவினார். இந்த ஆய்வு மையத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்களும் ஓலைச்சுவடிகளும் உள்ளன. கடந்த 2018-ல் ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக இந்த ஆய்வு நிறுவனம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க வாழ் இந்தியர்களால் திரட்டப்பட்ட பாதி நிதியால், ஆய்வு நிறுவனத்தை மூடும் முடிவு ஜூன் 2022 வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீதம் உள்ள ரூ.1.20 கோடியை தமிழக அரசு அளிக்கும் என கொலோன் பல்கலைக்கழகத்திற்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தமிழக அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘இச்சிக்கல் மீதானச் செய்தி, கடந்த பிப்ரவரி 27-ல் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் வெளியான பின் ரூ.1 கோடிக்கான காசோலையை கொலோனுக்கு வழங்க தமிழக அரசிடம் கருத்து உருவானது. அதற்குள் தமிழக தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமலானது. இதனால், மே 2-ல் தேர்தல் முடிவுகள் வெளியான பின் கொலோனின் தமிழ் நிறுவனத்திற்கு ரூ.1 கோடிக் கான காசோலை வழங்கப்பட்டு விடும்’ எனத் தெரிவித்தனர்.

’இந்து தமிழ்’ நாளேட்டின் செய்திக்கு பின் எதிர்கட்சித் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கொலோனுக்கு ரூ.1.20 கோடி நிதி வழங்கி தமிழ் நிறுவனத்தை காக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தி இருந்தார். இதனால், தமிழக தேர்தலின் முடிவுகளின்படி எந்த அரசின் ஆட்சி அமைந்தாலும் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் நிறுவனம் காக்கப்பட்டு விடும் என நம்பிக்கை ஜெர்மானியத் தமிழர்கள் இடையே பிறந்துள்ளது.

அதுவரை இந்நிறுவனம் மூடப் படும் அபாயத்திலிருந்து காக்க தற்காலிக நிதி தேவைப்படுகிறது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்க ஜெர்மனியில் வாழும் தமிழர்களால் ‘ஐரோப்பா தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரில் ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் கொலோனுக்காக ரூ.11.25 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழின் பெரு மையை பாரதியின் கூற்றுக்கிணங்க உலகறியச் செய்து வரும் இத்தமிழ் நிறுவனத்தை தொடர்ந்து செயல்பட உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் உதவியை நாடுகிறோம். தங்களால் இயன்ற உதவியை செய்து இந்த முயற்சி வெற்றியடைய உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT