பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்: படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

கேரளாவில் 'லவ் ஜிகாத்'துக்குத் தடை; சபரிமலை பாரம்பரியம் காக்கப்படும்: பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

பிடிஐ

கேரளாவில் லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்படும், சபரிமலை ஐயப்பன் கோயில் பாரம்பரியம் காக்கப்படும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தீவிரமாக இறங்கியுள்ளன.

பாஜகவும் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது, தேர்தல் பிரச்சாரத்துக்காக உ.பி. முதல்வர் ஆதித்யநாத், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் எனப் பலரும் வர உள்ளனர்.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது. மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மூத்த தலைவர்கள் ஓ.ராஜகோபால், பி.கே.கிருஷ்ணதாஸ், கேரள காமராஜ் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுபுரம் சந்திரசேகர் உடன் இருந்தனர்.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

  • கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், லவ் ஜிகாத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்.
  • குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
  • உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும்.
  • கேரள மாநிலத்தைத் தீவிரவாதம் இல்லா, பட்டினி இல்லாத மாநிலமாக மாற்றுவோம்.
  • சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.3,500 வழங்கப்படும். (மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கையில் ஓய்வூதிய நிதி ரூ.2,600 ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது)
  • மாநிலத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் அரசியல் தலையீடுகள் இன்றி பக்தர்கள் சுதந்திரமாகச் சென்றுவர ஏற்பாடு செய்யப்படும்.
  • கேரளாவில் கட்டாய மதமாற்றம் செய்வதற்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்படும்.
  • வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக 6 சிலிண்டர்கள் வழங்கப்படும். கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் மறு சீரமைப்புச் செய்யப்படும்.
  • புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். சபரிமலை ஐயப்பன் கோயில் பாரம்பரிய நடைமுறைகளைப் பாதுகாக்க சட்டம் கொண்டுவரப்படும்.

இவ்வாறு பாஜக் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், "கேரளாவில் கம்யூனிஸ்ட்டை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. மேற்கு வங்கத்தில் இருவரும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறார்கள். யார், யாருக்கு எதிராகப் போட்டியிடுகிறார்கள் என்பது கேரளாவில் வித்தியாசமாக இருக்கிறது.

ஏனென்றால், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இங்கு எதிராக நிற்கிறார்கள். கேலிக்கூத்து நடத்துகிறார்கள். மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தாலும் அது காங்கிரஸ் கட்சிக்குத்தான் செல்லும். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தாலும் அது கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் செல்லும். இடதுசாரி அரசின் உண்மையான முகம் சபரிமலை விவகாரத்தில் வெளியானது.

மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக்கொண்டு அதில் சின்ன மாற்றங்கள் செய்து மாநிலத் திட்டங்களாக பினராயி விஜயன் அறிவிக்கிறார். கடந்த 8 மாதங்களில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கியுள்ளோம். ஆனால், இதைக் கேரள அரசு தாங்கள் செய்ததாகக் கூறுகிறது. இதை பினராயி விஜயன் செய்யவில்லை. மோடிதான் செய்தார்''.

இவ்வாறு ஜவடேகர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT