இந்தியா

‘‘பெர்முடாஸ் டவுசர் அணிந்து வர  வேண்டியதுதானே’’- மம்தாவைக் கிண்டல் செய்த பாஜக தலைவரால் சர்ச்சை

செய்திப்பிரிவு

மம்தா பானர்ஜி ஏன் அவர் சேலை கட்டி வருகிறார். பேசாமல் பெர்முடாஸ் டவுசர் அணிந்து வர வேண்டியதுதானே என மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவைக் கடந்த 10-ம் தேதி தாக்கல் செய்தார்.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி கடந்த 10-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, காலிலும், கழுத்திலும் காயம் ஏற்பட்டதாகக் கூறி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை, அவர் நாடகமாடுகிறார் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனுவும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக முழு விசாரணை நடத்தி, அறிக்கையைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் மம்தா பானர்ஜிக்குப் பாதுகாப்பு வழங்கிய இசட் பிரிவு இயக்குநரை சஸ்பெண்ட் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. எனினும் மருத்துவமனையில் இருந்து திரும்பிய மம்தா பானர்ஜி, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவரது ஒரு காலில் பாண்டேஜுடன் செல்கிறார். இந்த நிலையில் அவரைக் கிண்டல் செய்யும் விதமாக மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் இன்று பேசியுள்ளார்.

அவர் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் ‘‘மம்தா பானர்ஜி ஏன் அவர் சேலை கட்டி வருகிறார். பேசாமல் பெர்முடாஸ் டவுசர் அணிந்து வர வேண்டியதுதானே’’ எனக் கூறியுள்ளார்.

மாநில முதல்வரை அநாகரிகமாக விமர்சித்துள்ள பாஜக தலைவருக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

SCROLL FOR NEXT