பாஜக ஆளும் மாநிலங்களில் மது அருந்துவோருக்கான வயது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை 25 என உயர்த்தினால், டெல்லியில் 30 ஆக உயர்த்தத் தம் அரசு தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி பாஜகவிற்குச் சவால் விடுத்துள்ளது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு நேற்று புதிய கலால் கொள்கையை வெளியிட்டது. அதில், மது அருந்துவோருக்கு 25 என்றிருந்த வயது 21 ஆகக் குறைக்கப்பட்டிருந்தது. இதனால் டெல்லியில் குற்றங்கள் அதிகரிக்கும் என்பது உள்ளிட்ட புகார்களை பாஜக எழுப்பியது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி பாஜகவிற்குச் சவால் விடுத்துள்ளது. இதில், பாஜக ஆளும் மாநிலங்களில் மது அருந்துவோருக்கான வயது 21 என்றிருப்பது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி ஆம் ஆத்மியின் தலைமை செய்தித் தொடர்பாளரான சவுரவ் பரத்வாஜ் கூறும்போது, ''பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் மது அருந்துவோருக்கான வயது 21 ஆக உள்ளது.
குறிப்பாக, பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான கோவாவில் மிகக் குறைவாக 18 வயதே மது அருந்தப் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாஜக ஒரு வெட்கம் இல்லாத கட்சி என்பது உறுதியாகிறது. எந்த அரசியல் கட்சியிடமும் இல்லாத பாசங்குத்தனம் பாஜகவிடம் இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்த வயதை 25 எனப் பாஜக உயர்த்தினால் டெல்லியில் அதை நாம் 30 ஆக உயர்த்தத் தயாராக உள்ளோம். மது அருந்துவோருக்கான வயதை தேசிய அளவில் 25 என ஒரே வகையில் அமைக்க, மத்திய அரசிடம் பாஜக வலியுறுத்த வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் பாஜக மீதான தனது குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்வைக்கிறது.
அரசு வருமானத்துக்காக மது அருந்துவோர் வயதை 21 எனக் குறைப்பதா என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலைச் சாடி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் புகாரை அடுத்து ஆம் ஆத்மி இந்தச் சவாலை விடுத்துள்ளது.
இதுகுறித்து சவுரவ் பரத்வாஜ் மேலும் கூறும்போது, ''டெல்லி உணவு விடுதிகளில் 21 வயது இளைஞர்கள் மது அருந்துவதை அதிகம் பார்க்க முடிகிறது. இதற்காகக் காவல்துறை நடத்திய பல அதிரடிச் சோதனைகளில் பல இளைஞர்கள் சிக்கினர். இதையடுத்துத் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டுள்ளது.
இந்தத் தொகை உயர் மட்டத்தினர் வரை சென்றடைகிறது. இதுபோன்ற தவறுகளைத் தடுத்து நிறுத்தவே டெல்லி அரசு மது அருந்துவோருக்கான வயதை 21 என்று ஆக்கியுள்ளது'' எனத் தெரிவித்தார்.