இந்தியா

அரசு வருமானத்துக்காக மது அருந்துவோர் வயதை 21 எனக் குறைப்பதா?- கேஜ்ரிவாலைச் சாடி டெல்லியில் பாஜக ஆர்ப்பாட்டம்

ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, மது அருந்துவோர் வயதை 25இல் இருந்து 21 ஆகக் குறைத்துள்ளது. இதன்மூலம், இளைஞர்களை மதுவிற்கு அடிமையாக்குவதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சாடி பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டெல்லியில் நேற்று மாநில அரசு சார்பில் புதிய கலால் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதில், மது அருந்தக் குறைந்தபட்ச வயதாக இருந்த 25 என்பதை 21 என ஆளும் ஆத்மி அரசு குறைத்தது. இதில், குறிப்பிட்ட பகுதிகளில் தனியார் விற்பனைக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து முதல்வர் கேஜ்ரிவால் வெளியிட்ட ட்வீட்டில், ''புதிய கலால் கொள்கையினால் மது மாஃபியாக்கள் சிக்கலுக்கு உள்ளாகிவிட்டனர். மாஃபியாக்களின் ஆதிக்கம், கல்வி, குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதை டெல்லியின் எதிர்க்கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் கண்டித்து, கடுமையாக விமர்சித்துள்ளன. ''நம் நாட்டின் தலைநகரம் இனி மதுவிற்குத் தலைநகரமாகும்'' எனக் காங்கிரஸின் மாநிலத் தலைவர் அணில்குமார் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து டெல்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் ராம்வீர்சிங் பிதூரி, ''மதுவின் தலைநகராக டெல்லி மாறி கிரிமினல் குற்றங்கள் அதிகரிக்கும்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், முதல்வர் கேஜ்ரிவால் அரசைக் கண்டித்து பாஜக சார்பில் டெல்லியில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், டெல்லி பாஜகவின் பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய டெல்லி பாஜக தலைவர் மாஸ்டர் வினோத் குப்தா கூறும்போது, ''மதுவைத் தடை செய்த காரணத்தினால்தான் குஜராத் மற்றும் பிஹாரில் குற்றங்கள் மிகவும் குறைந்திருக்கின்றன. இளைஞர்களை மது அருந்துவதிலிருந்து மீட்டு, பெண்கள் மீதான குற்றங்களையும் தடுத்து நிறுத்த, மதுவைத் தடை செய்வதற்கான கொள்கையைத் தீவிரப்படுத்த வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

டெல்லி பாஜகவின் துணைத் தலைவரான வீரேந்தர சச்தேவா பேசும்போது, ''மது அருந்துவதால் பல குடும்பங்களில் பிளவு ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற கொள்கைகள் அரசியல் நிதி திரட்டுவதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளன'' எனச் சுட்டிக் காட்டினார்.

டெல்லி அரசின் இந்த புதிய மதுக் கொள்கையானது, 20 சதவிகித வருமானத்தைப் பெருக்குவதற்காக அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT