கரோனா காலத்தில் பணப் பிரச்சினைதான் மன அழுத்தத்தைத் தரும் மிகப்பெரிய காரணமாக அமைந்திருந்தது என்று நான்கில் ஒரு குழந்தை கூறியது ஆய்வில் தெரிவித்துள்ளது.
சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (சிஆர்ஒய்) மற்றும் டாடா இன்ஸ்ட்டியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் (டிஐஎஸ்எஸ்) ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தின. "கரோனா தொற்றின்போது குழந்தைகளின் அனுபவங்களைப் புரிந்து கொள்வது: அழுத்தம், எதிர்ப்பு, ஆதரவு மற்றும் தாங்குதல் எனும் தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் கரோனா லாக்டவுன் காலத்தில் குழந்தைகள், பதின்பருவ வயதினர் அனுபவித்த மன அழுத்தம், வேதனைகள், சிக்கல்கள் போன்றவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
9 வயது முதல் 17 வயதுள்ள 13 நகரங்களைச் சேர்ந்த 821 குழந்தைகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, சண்டிகர், இந்தூர், புனே, சிலிகுரி, டார்ஜ்லிங், இம்பால், மோரே, பாதான் ஆகிய நகரங்களில் இருந்து 470 சிறுமிகள், 351 சிறுவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில் பாதிப் பேர், 48.7 சதவீதம் பேர் தங்களின் அன்றாட வாழ்க்கை முறையின் பெரும்பகுதி மாறிவிட்டது என்றும், சிறிதளவுதான் மாறியுள்ளது என 50 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். வாழ்க்கை முறை மாறியது தங்களுக்குக் கவலையளிப்பதாக 41.9 சதவீதம் பேரும், சலித்துப் போய்விட்டதாக 45.2 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்
ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில் 4 பேரில் ஒரு குழந்தை (26 சதவீதம்) கரோனா லாக்டவுன் காலத்தில் கடுமையான பணப் பிரச்சினையைக் குடும்பத்தில் சந்தித்தோம் என்று தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸால் ஏற்பட்ட பிரச்சினைகள் எப்போது முடியும் எனத் தெரியாது என்று 24 சதவீதம் பேரும், கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோம் என அஞ்சுவதாக 23.5 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்
தங்கள் தாய், தந்தையின் வேலை குறித்தும், தங்களின் கல்வி கற்கும் நிலை குறித்தும் பெரும் மன அழுத்தத்தில் இருந்ததாக 44.9 சதவீதம் குழந்தைகள் தெரிவித்தனர். இதில் 43.3 சதவீதம் சிறுமிகளும், 46.9 சதவீதம் சிறுவர்களும் இந்தக் கருத்தைத் தெரிவித்தனர்.
கரோனா காலத்தில் தாங்கள் சந்தித்த மன அழுத்தம், பிரச்சினைகளின்போது குடும்பத்தில் அதிகமான ஆதரவு அம்மாவிடம் இருந்து வந்தது என 59.3 சதவீதம் பேரும், தந்தையிடம் இருந்து வந்ததாக 45.9 சதவீதம் பேரும், உறவினர்களிடம் இருந்து ஆதரவு வந்ததாக 13.2 சதவீதம் பேரும் தெரிவித்தனர்.
கரோனா காலத்தில் குழந்தைகள் என்ன மாதிரியான பிரச்சினைகள் அனுபவித்தார்கள், அவர்கள் மனநிலை குறித்தும், உளவியல்ரீதியாக எந்த மாதிரியான பிரச்சினைகளை அவர்கள் சந்தித்தார்கள் என்பது குறித்து பெரும்பாலும் கருத்தில் கொள்ளப்படவில்லை, குழந்தைகள் பெரும்பாலும் மோசமான பாதிப்புகளைத்தான் லாக்டவுன் காலத்தில் எதிர்கொண்டனர் என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து டிஐஎஸ்எஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஷாலினி பாரத் கூறுகையில், " கரோனா லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் ஏராளமான மன அழுத்தங்களைச் சந்தித்துள்ளார்கள். பணப் பிரச்சினைகள், விளையாடும் நேரம் குறைவு, நண்பர்களைச் சந்திக்க முடியாமை, பள்ளி செல்ல முடியாமை, கல்வி கற்க முடியாமல் போனது எனப் பல அழுத்தங்களைச் சந்தித்துள்ளனர்.
அதிலும் ஏழ்மையில் வாழும் குழந்தைகள் கரோனா காலத்தில் மோசமான அனுபவங்களைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக இந்த ஆய்வின் மூலம், கரோனா லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் சந்தித்த பிரச்சினைகள், அழுத்தங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு உதவி செய்ய முடியும்" எனத் தெரிவித்தார்.