இந்தியா

புயல் நிவாரண நிதியை சுருட்டிய மம்தாவை மக்கள் நிராகரித்து விட்டனர்; பாஜக 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி: அமித் ஷா நம்பிக்கை

செய்திப்பிரிவு

மேற்குவங்க மக்கள் மம்தா பானர்ஜியை முழுமையாக நிராகரித்து விட்டனர், இந்த தேர்தலில் பாஜக 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பிஹார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.

இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன.

இந்தநிலையில் மேற்கு வங்கா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, நேற்று கொசபாவில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

மேற்குவங்க மாநிலத்தில் மத்திய அரசு திட்டங்கள் எதையும் மம்தா அமல்படுத்துவது இல்லை. அவருக்கு பொதுமக்கள் நலனில் அக்கறை இல்லை. தன் மருமகன் நலனுக்காகவே உழைக்கிறார். மேற்குவங்க மக்கள் மம்தா பானர்ஜியை முழுமையாக நிராகரித்து விட்டனர். இந்த தேர்தலில் பாஜக 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

மேற்கு வங்காளத்தில் கடந்த ஆண்டு அம்பான் புயல் தாக்கியது. புயல் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி அளித்தது. ஆனால், அதில் ஒரு பைசா கூட மக்களுக்கு கிடைக்கவில்லை.

அந்த பணம் எங்கே போனது, எல்லாவற்றையும் மம்தா பானர்ஜியும், அவருடைய சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜியும் சுரண்டி விட்டனர்.
பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, புயல் நிவாரண நிதியை மோசடி செய்வதவர்களை ஜெயிலுக்கு அனுப்புவோம்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.

SCROLL FOR NEXT