பாகிஸ்தானுடன் இணக்கமான உறவையே இந்தியா விரும்புகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பாகிஸ்தான் தினத்தையொட்டி அந்நாட்டுப் பிரதமருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார் பிரதமர் மோடி.
அக்கடிதத்தில், ”ஓர் அண்டை நாடாக, இந்தியா பாகிஸ்தானுடன் இணக்கமான உறவையே விரும்புகிறது. ஆனால் இது நிறைவேற, நம்பிக்கையான சூழல் அமைய வேண்டும். அதற்குத் தீவிரவாதமும், வெறுப்பும் ஒழிக்கப்பட வேண்டும்.
கரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொண்டு சமாளித்து வரும் இம்ரான் கானுக்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதம் வழக்கமாக ஆண்டுதோறும் பாகிஸ்தான் தினத்தன்று அனுப்பப்படுவது பாரம்பரியம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இந்தியா பாகிஸ்தான் இடையே இணக்கமான சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவம் தாமாகவே முன்வந்து, எல்லையில் அத்துமீறுவதில்லை என்ற 2003 ஒப்பந்தத்தை கடைபிடிக்கத் தொடங்கியது.
கடந்த திங்கள்கிழமை, சிந்துநதி ஆணைய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாகிஸ்தான் உயர்மட்டக் குழு இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.