நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் தணிக்கையின்றி திரைப்படங்கள், இணைய தொடர்கள் வெளியாகின்றன. ஓடிடி தளங்களின் நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய, மேலாண்மை செய்ய தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர்கள் சசாங்க் சேகர், அபூர்வா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு குறித்து பதில் அளிக்கமத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே ஓடிடி தளங்களுக்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் வெளியிட்டது. அதில் ஓடிடி தளங்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை சான்றிதழ் அவசியம் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த பின்னணியில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது:
ஓடிடி தளங்கள் தொடர்பாக சமூகஆர்வலர்கள், எம்பி.க்கள், முதல்வர்களிடம் இருந்து வந்த புகார்களின்பேரில் ஓடிடி தளங்களின் நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய, ஒழுங்குமுறைப்படுத்த அண்மையில் ‘ஓடிடி,டிஜிடல் மீடியாக்களுக்கான வரைவுதகவல் தொழில்நுட்பம் விதிகள் -2021’ வெளியிடப்பட்டன.
இணையத்தில் ஒளிபரப்பாகும் தகவல், ஆடியோ, காட்சி போன்றவை சட்டப் பிரிவு 67, 67ஏ, 67பிஆகியவற்றின் கீழ் கண்காணிக்கப்படுகிறது. அநாகரிகமான காட்சிகள், ஆடியோ வெளியிடுவதை இந்த சட்டப் பிரிவுகள் தடை செய்கிறது. ஓடிடி தளங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க வசதி செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா, சஞ்சீவ் கன்னாஅமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓடிடி தளங்கள்குறித்து பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளை ஒன்றாக சேர்த்து உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து ஹோலி பண்டிகைக்கு பிறகு முடிவு செய்யப்படும்என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இப்போதைக்கு ஓடிடி தளங்கள்தொடர்பாக உயர் நீதிமன்றங்களில்நடக்கும் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.