இந்தியா

கேரளாவில் காங்கிரஸ் முன்னணி ஆட்சிக்கு வந்தால் - குறைந்தபட்ச வருமான உத்தரவாதத் திட்டத்தை அமல்படுத்துவோம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உறுதி

செய்திப்பிரிவு

கேரளாவில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் கேரளாவை ஆளும் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணிக்கும் (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (யுடிஎஃப்) இடையே போட்டி நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் பாஜகவும் இந்தத் தேர்தலில் வெற்றிக்கனியைப் பறிக்க கடுமையான சவால்களை இரு முன்னணிக்கும் அளித்து வருகிறது.

ராகுல் காந்தி, கேரளாவிலுள்ள வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதால் கேரள தேர்தலில் அதிக அக்கறை காட்டி வருகிறார். தேர்தலையொட்டி கோட்டயம் மாவட்டம் மனார்காட் அருகிலுள்ள புதுப்பள்ளி தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இங்குதான் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி போட்டியிடுகிறார்.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

கேரளாவை ஆளும் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி மக்களின் குறைகளைத் தீர்க்கும் அரசாக இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால்தான் மக்கள் குறைகளைத் தீர்க்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச வருமான உத்தரவாதத் திட்டத்தை (நியாய்) திட்டத்தை அமல்படுத்துவோம்.

சுயநல காரணங்கள்

இந்தத் திட்டத்தை அமல்படுத்த என்னிடம் சுயநல காரணங்கள் உள்ளன. இந்தத் திட்டம் நிச்சயம் வெற்றி பெறும். வறுமையை விரட்டுவதற்கு இந்தத் திட்டம் நிச்சயம் உதவும். இந்தத் திட்டம்வெற்றி பெற்றால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவோம்.

இதன்மூலம் வறுமையை எதிர்ப்பது எப்படி என்பதை மற்ற மாநிலங்களுக்கு கேரளா காட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பருத்தும்பரா தொகுதியில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்த நியாய் திட்டம் அறக்கட்டளை போன்றது கிடையாது. நியாய்திட்டம் மூலம் உங்கள் சட்டைப் பைக்கே பணம் வந்து சேரும். அதிலிருந்து நீங்கள் பணத்தை எடுத்து செலவிட முடியும். இதுவேசரிந்து போயுள்ள இந்திய பொருளாதார நிமிர்த்துவதற்கான வழியாகும். இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.2,000 பென்ஷன்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் பென்ஷன்வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாதம்தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் 12 மாதத்துக்கு ரூ.72 ஆயிரத்தை வழங்கும் திட்டத்தையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT