பஞ்சாபில் உருமாறிய கரோனா வைரஸ் அதிகஅளவில் பரவி வருகிறது, புதிய நோயாளிகளில் 81 சதவீதம் பேர் உருமாறிய கரோனா ரைவஸ் மூலமே பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே 60 வயக்கும் குறைவானவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவது ஒன்று தான் தீர்வு, இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.
இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் தற்போது 3,34,646 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 2.87 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 46,951 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் அன்றாட கோவிட் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,535 பேரும், பஞ்சாபில் 2,644 பேரும், கேரளாவில் 1,875 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 80.5% பதிவாகியுள்ளது.
தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கரோனா பரவல் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தை பஞ்சாப் முதல்வர் வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
பஞ்சாபில் அதிகரித்து வரும் கரோனா பரவலுக்கு பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருவமாறிய கரோனா வைரஸ் காரணம். இந்த வகை கரோனா வைரஸ் பஞ்சாபில் வேகமாக பரவி வருகிறது.
புதிய நோயாளிகளில் 81 சதவீதம் பேர் உருமாறிய கரோனா ரைவஸ் மூலமே பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் 401 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில் 81 சதவீதம் உருமாறிய கரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் சென்று வந்த பஞ்சாப் இளைஞர்களிடம் இந்த வைரஸ் அதிகமாக பரவியுள்ளது. எனவே 60 வயக்கும் குறைவானவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவது ஒன்று தான் தீர்வு. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.