இந்தியா

நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை அவசியம்: உச்ச நீதிமன்றத்தில் சட்ட நிபுணர்கள் யோசனை

பிடிஐ

உச்ச நீதிமன்றம், உயர் நீதி மன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கான தேர்வுக் குழு (கொலீஜியம்) நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்று உச்ச நீதிமன்றத்தில் சட்ட நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமித்தல், அவர்களுக்கு மாறு தல் உத்தரவுகளை வழங்குதல் ஆகிய பணிகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு கவனித்து வந்தது.

‘கொலீஜியம் நடைமுறை’ எனக் கூறப்படும் இந்த வழக்கம் 1993 முதல் அமலில் இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் செல்லாது என்று கடந்த அக்டோபர் 16-ம் தேதி தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் கேஹர், மதன் லோக்கூர், குரியன் ஜோசப், கோயல், செலமேஸ்வர் ஆகிய 5 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பை வழங்கியது.

இதில் செலமேஸ்வர் மட்டும் நீதிபதிகள் நியமன ஆணையம் செல்லும் என்று கருத்து தெரி வித்தார். எனினும் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தால் அவர் தீர்ப்பளிக்காமல் விலகினார்.

மீண்டும் விசாரணை

இந்நிலையில் கொலீஜியம் நடைமுறையை மேம்படுத்துவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. கடந்த 16-ம் தேதி தீர்ப்பு வழங்கிய அதே 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கையும் விசாரித்தது.

மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் மற்றும் மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

நீதிபதிகள் நியமன தேர்வின் போது எந்த தகுதியின் அடிப் படையில் நீதிபதிகள் நியமிக்கப் படுகிறார்கள், எதற்காக நிராகரிக் கப்படுகிறார்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் யோசனை தெரிவித்தனர்.

கடந்த வழக்கின்போது தேசிய நீதிபதிகள் சட்ட ஆணையத்துக்கு எதிராக வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பாலி நாரிமன், அனில் திவான், ராஜீவ் தவான், அர்விந்த் தத்தார் ஆகியோர் நீதிபதிகள் முன்பு ஆஜராகி தங்கள் கருத்து தெரிவித்தனர்.

அவர்கள் கூறியபோது, நீதிபதிகள் நியமனத்தில் ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுவது அவசியம் என்று எடுத்துரைத்தனர்.

சுமார் 2 மணி நேரம் விவாதம் நீடித்தது. தகுதி விதிகள், தேர்வுக் குழுவுக்கு செயலகம் அமைப்பது, புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவது குறித்து யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

இறுதியில் நீதிபதிகள் கூறியபோது, நீதிமன்றத்தில் யோசனைகளை கூறிய சட்ட நிபுணர்கள் அவற்றை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

வழக்கின் அடுத்த விசா ரணை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT