புர்லியா மாவட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காட்சி: படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

மோடியின் பொய் தொழிற்சாலை மட்டும்தான் இருக்கும்; மற்ற அரசு நிறுவனங்களை பாஜக அரசு மூடிவிடும்: மம்தா தாக்கு

பிடிஐ

மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்தையும் பாஜக விற்று வருகிறது. இறுதியில் மோடியின் பொய் தொழிற்சாலை மட்டும்தான் நிலைத்திருக்கும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாகச் சாடினார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

ஆட்சியை மூன்றாவது முறையாகத் தக்கவைக்கும் முயற்சியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது, பாஜகவுக்கும் பதிலடி கொடுத்து பிரதமர் மோடி, அமித் ஷா என முக்கியத் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புர்லியா மாவட்டத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''மிகப்பெரிய வாக்குறுதிகளை எல்லாம் மக்களிடம் பாஜக அளிக்கிறது. நான் கேட்கிறேன், மேற்கு வங்க மக்களுக்கு இதுவரை பாஜக என்ன செய்தது? திரிபுரா, அசாம் மாநிலத்தில் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை.

அசாம், திரிபுராவில் உள்ள ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பாஜக அரசால் வேலையிழந்துள்ளார்கள். மத்திய அரசுக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் பாஜக ஆட்சிக்கு வந்தபின் மூடப்பட்டுள்ளன. ஒரு தொழிற்சாலை மட்டும்தான் இயங்குகிறது. அது மோடியின் பொய் தொழிற்சாலை, பாஜகவின் மோசடித் தொழிற்சாலை.

மேற்கு வங்க மக்கள் எந்தவிதமான வகுப்புவாத அரசியலிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். இந்த மண்ணைச் சாராத வெளியில் இருந்து வந்துள்ளவர்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது.

எனக்கு எதிராக எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், அச்சுறுத்தல்கள் செய்தாலும் நான் அவர்களை எதிர்த்துப் போராடுவேன்''.
இவ்வாறு மம்தா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT