வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், ஓமன் நாட்டின் நீண்டகால ஆட்சியாளர் சுல்தான் காபூஸ் ஆகியோருக்கு காந்தி அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டு முதல் மத்திய கலாச்சாரத் துறை சார்பில் காந்தி அமைதி விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கான விருத்துக்கு ஓமன் நாட்டின் நீண்டகால ஆட்சியாளர் மறைந்த சுல்தான் காபூஸ் பின் சையது அல் சையது பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா பகுதி அமைதிப்பணியில் சுல்தான் காபூஸ் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக இவர் அதிகம் செயல்பட்டுள்ளார். பாரசீக வளைகுடாவில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய தலைவராகத் திகழ்ந்தார்.
இதுபோல் 2020-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் பெயர் அறிவிக்கப் பட்டுள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்புக்கு பிறகு பிரதமர் மோடி முதல் வெளிநாட்டுப் பயணமாக வரும்26-ம் தேதி வங்கதேசம் செல்கிறார்.
அங்கு நடைபெறும் தேசியநாள் நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராகப் பங்கேற்கிறார். இந்நிலையில் அவரது பயணத்துக்கு சில நாட்களுக்கு முன் இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக இம்முறை இவ்விருது இரு தலைவர்களுக்கு மறைவுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுரவமிக்க இவ்விருது ரூ.1 கோடி பரிசுத் தொகை, பாராட்டு பத்திரம் மற்றும் ஒரு நேர்த்தியான பாரம்பரிய கைவினைப் பொருள் அல்லது கைத்தறிப் பொருளுடன் வழங்கப்படும்.