சதானந்த கவுடா 
இந்தியா

கேரளாவில் பாஜக ஆட்சி அமைத்தால் லவ் ஜிகாத்தை தடுக்க சட்டம் இயற்றப்படும்: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உறுதி

செய்திப்பிரிவு

கேரளாவில் பாஜக ஆட்சி அமைத்தால் லவ் ஜிகாத்தை தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 6-ம் தேதி கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் கூட்டணிக்கு இணையாக பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் மூத்த தலைவர்கள் கேரளாவில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த பின்னணியில் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சதானந்த கவுடா, திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் லவ் ஜிகாத்தை தடுக்க சட்டம் இயற்றப்பட்டு, அமல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல கேரளாவில் பாஜக ஆட்சி அமைத்தால் லவ் ஜிகாத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும். லவ் ஜிகாத்தால் கேரளாவை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு லவ் ஜிகாத்தை ஆதரிக்கிறது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றால் தேவசம் போர்டுகள் கலைக்கப்படும். கோயில் நிர்வாகங்கள் பக்தர்களிடம் ஒப்படைக்கப்படும்.

மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆட்சியில் தேசவிரோத நடவடிக்கைகளின் மையப்புள்ளியாக கேரளா உருவெடுத்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறார். அவரது ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. அடிப்படை ஜனநாயகம்கூட இல்லை. அனைத்து துறைகளிலும் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. வேளாண், தொழில் துறை நலிவடைந்துள்ளன. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது.

அரசு இயந்திரத்தை மாநில அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது.ஆர்எஸ்எஸ், பாஜக தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தலைவர்களாக உள்ளனர். புதிய கேரளாவை உருவாக்க வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார்.

கடந்த 2020-ம் ஆண்டில் நடைபெற்ற கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 17.3 சதவீதமாக உயர்ந்தது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த கட்சியின் வாக்கு சதவீதம் 30 முதல் 35 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT