கோப்புப்படம் 
இந்தியா

கேரளாவில் பாஜக வேட்பாளர்கள் 3 பேர் வேட்பு மனு நிராகரிப்பை எதிர்த்து மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

பிடிஐ

கேரளாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக வேட்பாளர்கள் 3 பேரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் குருவாயூர் தொகுதி பாஜக வேட்பாளரும், மகிளா மோர்ச்சா மாநிலத் தலைவருமான நிவேதிதா சுப்ரமணியன், கண்ணூர் மாவட்ட பாஜக தலைவரும், தலச்சேரி பாஜக வேட்பாளருமான ஹரிதாஸ் ஆகியோரின் வேட்புமனுக்கள் பரிசீலனையில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதில் பாஜக வேட்பாளர்கள் ஹரிதாஸ், நிவேதிதா சுப்பிரமணியன் வேட்புமனுவில், ஏ படிவத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் கையொப்பம் இல்லை என்பதால் அதிகாரிகள் நிராகரித்தனர்.

அதேபோல இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தனலட்சுமியின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பாஜக வேட்பாளர்கள் நிவேதிதா, ஹரிதாஸ், அதிமுக வேட்பாளர் தனலட்சுமி: படம் உதவி | ட்விட்டர்.

இதற்கிடையே பாஜக வேட்பாளர்கள் ஹரிதாஸ், நிவேதிதா சுப்பிரமணியன் இருவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்தனர். தலச்சேரி தொகுதியிலும, குருவாயூர் தொகுதியிலும் பாஜகவுக்குக் கணிசமான வாக்குகள் இருக்கின்றன என்பதால், பாஜக வேட்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடினர்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி என்.நாகரேஷ் முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டது.

அப்போது, தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், "தேர்தல் அறிவிக்கை வெளியிட்டபின், அதில் எடுக்கப்படும் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது" எனத் தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாகரேஷ், தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரிகளின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது எனக் கூறி 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

இதனால், தலச்சேரி, குருவாயூர், தேவிகுளம் ஆகிய தொகுதிகளில் பாஜக, அதிமுக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT