தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடக்கும் நாளிலும், வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாகவும், இருசக்கர வாகனத்தில் எந்தவிதமான ஊர்வலமும் செல்லத் தடை விதித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடக்கும் தொகுதிகளில் பைக்கில் ஊர்வலமாகச் செல்லும் சமூக விரோதிகள் வாக்காளர்களை மிரட்டிக் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கச் சொல்வதாகத் தகவல் எழுந்ததையடுத்து, இந்த உத்தரவைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. இரு மாநிலங்களிலும் முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது.
இந்நிலையில், வாக்குப்பதிவுக்குச் சில நாட்களுக்கு முன்பும், வாக்குப்பதிவு அன்றும் சமூக விரோதிகள் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் செல்கிறார்கள். அப்படிச் செல்லும்போது வாக்காளர்களுக்கு மிரட்டல் விடுத்துக் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும்படி கோருகிறார்கள் என்று தேர்தல் ஆணையத்துக்குப் புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் இன்று 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''தேர்தல் நடக்கும் மாநிலங்களில், சில பகுதிகளில் தேர்தல் நடக்கும் நாளிலும், அதற்குச் சில நாட்களுக்கு முன்பும் சமூக விரோதிகள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று, வாக்காளர்களை மிரட்டுவதாகப் புகார்கள் வந்தன.
இந்தப் புகார்களைக் கருத்தில் கொண்டு, தேர்தல் நடக்கும் மாநிலங்களில், தேர்தல் நடக்கும் தொகுதிகளிலும், தேர்தல் நடப்பதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாகவும், தேர்தல் அன்றும் இருசக்கர வாகனத்தில் யாரும் ஊர்வலம் செல்லக் கூடாது.
அனைத்துத் தேர்தல் அதிகாரிகளும் இந்த உத்தரவை வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோருக்குத் தெரிவித்து, விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க உத்தரவிடுகிறோம்" எனத் தெரிவித்துள்ளது.