உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரேந்திர சிங் ராவத் கடந்த சில வாரங்களுக்கு முன் மாற்றப்பட்டு, புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா வைரஸ் பரவல் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலை உருவாகிவிட்டதா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாநில முதல்வர்கள் எனப் பலரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானார். இந்நிலையில், உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்தும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் தீரத் சிங் ராவத் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்தவிதமான உடல்நலக் குறைவும் இல்லை இயல்பாக இருக்கிறேன். மருத்துவர்கள் அறிவுரைப்படி நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்.
கடந்த சில நாட்களாக என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் தங்களைக் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவும்" எனத் தெரிவித்துள்ளார்.