அண்மையில் பெண்களின் ஆடைக் கலாச்சாரம் பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கிய உத்தரகாண்ட் முதல்வர் தற்போது இந்தியாவை 200 ஆண்டுகள் ஆட்சி செய்தது அமெரிக்கா என்று பேசிய வீடியோ வைரலாவதால் மீண்டும் செய்தியாக இருக்கிறார்.
பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் தீரத் சிங் ராவத். இவர் கரோனா தடுப்புப் பற்றி அண்மையில் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா கரோனா பெருந்தொற்றை வெற்றிகரமாக சமாளித்து வருகிறது. இந்தியாவை 200 ஆண்டுகளாக அமெரிக்கா ஆட்சி செய்தது.
உலகையே ஆட்டிப்படைத்தது. ஆனால், இன்று கரோனா பெருந்தொற்றை சமாளிக்க முடியாமல் தவிக்கிறது.
சுகாதாரத் துறையிலும் உலகளவில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது அமெரிக்கா ஆனால் அங்கு இதுவரை 50 லட்சம் பேர் கரோனாவால் இறந்துள்ளனர். இதனால், அங்கு மீண்டும் ஊரடங்கு அமலாக்கம் செய்ய திட்டமிடப்படுகிறது.
ஒருவேளை இந்தியாவில் மட்டும் மோடி பிரதமராக இருந்திருக்காவிட்டால், பெருந்தொற்று காலத்தில் நம் நாடு என்னவாகி இருக்கும் என்று கற்பனை செய்ய முடியவில்லை. நாம் மோசமான நிலைக்குச் சென்றிருக்கலாம். ஆனால், பிரதமர் நமக்கு ஆறுதல் அளித்திருக்கிறார்.
அவர் நம் அனைவரையும் காப்பாற்றினார். ஆனால், நாம் இன்று கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை. முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல், சமூக விலகலைக் கடைபிடித்தல் போன்றவற்றை நாம் கடைபிடிப்பதில்லை.
இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
கரோனா தடுப்பு பற்றிய அவரது விழிப்புணர்வு ஏற்கத்தக்கது என்றாலும், ஒரு மாநில முதல்வராக இருந்து கொண்டு அடிப்படை வரலாற்றையும், புள்ளிவிவரங்களையும் பற்றி தவறான தகவல்களை மக்களுக்குத் தெரிவித்தது சர்ச்சையாகி இருக்கிறது.