இந்தியா

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தொலை வாக்குப்பதிவு அறிமுகம் ஆகலாம்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

செய்திப்பிரிவு

வரும் 2024 மக்களவைத் தேர்தலின்போது தொலை வாக்குப்பதிவு நடைமுறை அறிமுகம் ஆகலாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த பிரைம் பாயின்ட் அறக்கட்டளை சார்பில் கடந்த 2010-ம் ஆண்டில் சன்சாத் ரத்னா விருது ஏற்படுத்தப்பட்டது. மக்களவையில் சிறப்பாக செயல்படும் எம்.பி.க்களுக்கு இந்த விருதுவழங்கப்படுகிறது.

இதன்படி 16-வது மக்களவையில் சிறப்பாக செயல்பட்ட எம்.பி.க்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த சுப்ரியா சுலே, சிவசேனாவை சேர்ந்த ஷிராங் அபா பர்னே உள்ளிட்டோருக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விருதுகளை வழங்கினார்.

விருது வழங்கும் விழாவில்சுனில் அரோரா பேசியதாவது:

வரும் 2024-ம் ஆண்டில் தொலைவாக்குப்பதிவு (ரிமோட் வோட்டிங்) நடைமுறை அறிமுகம் செய்யப்படலாம். இதற்கான தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி மற்றும்இதர ஐஐடி கல்வி நிறுவனங்களைசேர்ந்த நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர். அடுத்த 3 மாதங்களில் தொலை வாக்குப்பதிவு நடைமுறை சோதனை செய்யப்படும்.

புதிய நடைமுறையால் சொந்த ஊரில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள், நோயாளிகள், தொழில் நிபுணர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பயன் அடைவார்கள். தொலை வாக்குப்பதிவு நடைமுறையில் சுதந்திரமான, நேர்மையான, நம்பகமான, வெளிப்படையான வாக்குப்பதிவு உறுதி செய்யப்படும். புதிய திட்டம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்தாலோசிக்கப்படும்.

வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க வகை செய்யும் திட்டம்அடுத்த 6 மாதங்கள் முதல் ஓராண்டுக்குள் அமல் செய்யப்படலாம். அவர்கள் மின்னணு தபால் முறையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாகவும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசிக்கப்படும்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய சட்ட அமைச்சர் கூறியிருக்கிறார். இதை வரவேற்கிறோம். இதன்மூலம் ஒரே நபர், பல வாக்காளர் அட்டைகளை பெறுவதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொலை வாக்குப்பதிவு நடைமுறை குறித்து முன்னாள் துணை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

தொலை வாக்குப்பதிவு என்பது வீட்டில் இருந்தே இணையதளம் வழியாக வாக்களிக்கும் நடைமுறை கிடையாது. இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் அந்தந்த நகரங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். உதாரணமாக, வாக்குப்பதிவு நாளில் சென்னையை சேர்ந்த ஒருவர், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக டெல்லியில் இருக்கிறார் என்றால் அவர் டெல்லியில் உள்ள சிறப்பு மையத்தில் வாக்களிக்க முடியும்.

இந்த நடைமுறையில் வாக்களிக்க விரும்புவோர், தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளரின் அடையாளம் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகேஅவர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT