அசாம் மாநிலம் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி கோலாகட் மாவட்டம் போகாகட் பகுதியில் பாஜகவின் பிரசார பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தொண்டர்களை நோக்கி கையசைக்கிறார்.படம்: பிடிஐ 
இந்தியா

காங்கிரஸ் என்றால் பொய்கள், ஊழல்கள்: அசாம் பிரச்சாரத்தில் மோடி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

‘‘காங்கிரஸ் என்றால் பொய்கள், குழப்பம், ஊழல் என்று பொருள்’’ என்று அசாம் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

அசாமில் 27-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அசாம் அமைச்சரும் பாஜக.வின் கூட்டணி கட்சியான அசாம்கண பரிஷத் (ஏஜிபி) தலைவருமான அடுல் போரா, கோலாகட் மாவட்டம் போகாஹட் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது மோடி பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்லும். அதற்கு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஏராளமான பொய்களே ஆதாரம். இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போதும், அசாமில்ஆட்சியில் இருந்த போதும் ஏராளமான பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது. ஆனால்அசாமில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை கொண்டு வர தவறிவிட்டது. மத்தியிலும் அசாமிலும் என 2 இடங்களிலும் காங்கிரஸ் ஆட்சி யில் இருந்த போது, இரட்டை அலட்சியத்துடன் நடந்து கொண்டது. அதேவேளையில் 2 இடங்களிலும் ஊழலும், 2 இடங்களிலும் ஊடுருவலும் நடைபெற்றது.

அசாமில் வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகவும் பொய் வாக்குறுதிகளை காங்கிரஸ் பரப்பியது. ஆனால், எதையும் செய்யவில்லை. தற்போது மத்தியிலும் அசாமிலும் உள்ள பாஜக அரசு இரட்டை இன்ஜின்கள் போல் செயல்படுகின்றன. மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளன.

நாட்டின் மற்ற பகுதி களுடன் அசாம் மாநிலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக.வை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்தால், அடுத்த 5 ஆண்டுகள் அசாம் மாநிலம் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் முன்னேறும்.

குண்டுவெடிப்புகளில் இருந்தும், வன்முறைகளில் இருந்தும் அசாம் மாநிலம் விடுதலை பெறாதா? அமைதி ஏற்படாதா என்று காங்கிரஸ் ஆட்சி யில் மக்கள் நினைப்பது வழக்கம். தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, வன்முறைகளை ஒடுக்கி அமைதியையும் ஸ்திரத்தன்மை யையும் கொண்டு வந்தள்ளது.

கடத்தல்காரர்கள் கைது

கடத்தல்காரர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்து வந்தது.அரிய காண்டா மிருகங்களை கொன்று அதன் தோல் மற்றும் கொம்புகள் களவாடப்பட்டன. தற்போது கடத்தல்காரர்கள் ஒடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மிகவும் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்கா கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

SCROLL FOR NEXT