மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று எய்ம்ஸ் மருத்துவனை தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், தமிழகம், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கரோனாவில் ஏற்கெனவே பாஜகவைச் சேர்ந்த அமித் ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த வரிசையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஓம் பிர்லா, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில், “மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கடந்த 19-ம் தேதி நடத்திய பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள கோவிட் சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது ஓம் பிர்லாவின் உடல்நிலை சீராக இருக்கிறது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.