22 வயதுப் பெண்ணின் ட்வீட்டுக்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, அசாமில் வெள்ளம் வந்தபோது வருத்தம் தெரிவித்தாரா என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
டூல்கிட் விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பு இருக்கிறது என்று பிரதமர் மோடி, சவுபா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குற்றம் சாட்டிய நிலையில், பிரியங்கா காந்தி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியும், ஆளும் பாஜகவும் தீவிரமாக இறங்கியுள்ளன.
ஜோர்கட் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''நான் பிரதமர் மோடியின் பேச்சை நேற்று கவனித்தேன். மாநிலத்தின் வளர்ச்சி குறித்து கவலைப்படுவதாக மிகவும் உருக்கமாக பிரதமர் கூறினார். அசாம் மாநிலத்தின் வளர்ச்சி பற்றி கவலைப்பட்டாரா அல்லது மாநிலத்தில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி கவலைப்பட்டாரா?
அசாம் மாநிலத்தின் தேயிலைத் தோட்டத் தொழிற்சாலையை அழிக்க காங்கிரஸ் சதித்திட்டம் தீட்டுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். சமூக ஊடகத்தில் இரு தவறான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தவறுதலாகப் பதிவிட்டதாக மோடி தெரிவித்தார்.
22 வயதுப் பெண் திஷா ரவியின் ட்வீட் பற்றி பிரதமர் பேசியபோது எனக்கு வருத்தமாக இருந்தது. நான் கேட்கிறேன், அசாமில் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் வந்தபோது, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அப்போது பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தாரா?
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முயன்றபோது, 5 இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். மாநிலம் கொந்தளித்து தீப்பற்றி எரிந்தது. அப்போது மோடி கவலைப்பட்டாரா? வெள்ளத்தால் அசாம் மாநிலம் மூழ்கும்போது மோடி ஏன் வரவில்லை? பாஜக அளித்த பெரிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாதது குறித்து ஏன் அவர் வருத்தப்படவில்லை?
தேயிலைத் தோட்டத்துக்குச் சென்று அங்குள்ள தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி பேசியுள்ளாரா? ரூ.350 ஊதியம் உயர்த்தப்படும் என பாஜக வாக்குறுதியளித்தது. இதுவரை நிறைவேற்றவில்லை. தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு எந்த வசதியும் இல்லை. குடிநீர், கழிப்பறை வசதிகூட இல்லை எனக் கண்ணீர் வடிக்கிறார்கள். ஊதியமும் உயர்த்தப்படவில்லை. அதுகுறித்து பிரதமர் மோடி கவலைப்பட்டாரா?
அசாம் மாநிலத்தில் இரு இயந்திரங்கள் கொண்ட அரசு செயல்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். உண்மையில், தற்போது மாநிலத்தில் இரு முதல்வர்கள்தான் இருக்கிறார்கள், (அதிக அதிகாரம் கொண்ட ஹிமாந்தா பிஸ்வா சர்மா, முதல்வர் சர்பானந்தா சோனாவால் இடையே அதிகாரப் போட்டி) எந்த எரிபொருளில் இயந்திரம் ஓடுகிறது என எனக்குத் தெரியாது. அசாம் மாநில அரசு அசாமில் நிர்வகிக்கப்படவில்லை. கடவுள்தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்.
25 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அசாம் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் 6-வது ஒப்பந்தத்தை நிறைவேற்றுதல் என எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை''.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.