உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே: கோப்புப் படம். 
இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம்?- எஸ்.ஏ.பாப்டேவுக்கு மத்திய அரசு கடிதம்

பிடிஐ

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கக் கோரி தற்போதுள்ள தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 23-ம் தேதியோடு முடிகிறது. அதனால் இப்போது இருந்தே புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கிவிட்டது.

இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனத்தில் சில மரபுகள் பின்பற்றப்படுகின்றன. இதன்படி, ஓய்வு பெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்ததாக அந்தப் பதவியில் யாரை நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வார்.

இது பெரும்பாலும் மூத்த நீதிபதியைத் தலைமை நீதிபதியாக நியமிக்கவே பரிந்துரை செய்யப்படும். அவர் தகுதியானவராக இருந்தால், அவரையே தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரை செய்வார். அதை ஏற்று, குடியரசுத் தலைவரும் நியமன உத்தரவைப் பிறப்பிப்பார்.

ஆனால், தலைமை நீதிபதி பதவிக்குப் பரிந்துரை செய்யப்படும் மூத்த நீதிபதி தகுதியானவராக இல்லாத பட்சத்தில், அடுத்ததாக யாரை நியமிக்கலாம் என்பது பற்றி உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு அடுத்த நிலையில் தற்போது மூத்த நீதிபதியாக எஸ்.வி.ரமணா இருக்கிறார். 1957-ம் ஆண்டு, ஆகஸ்ட் 27-ம் தேதி பிறந்த நீதிபதி எஸ்.வி.ரமணாவின் பதவிக் காலம், 2022, ஆகஸ்ட் 26-ம் தேதி வரையில் உள்ளது.

SCROLL FOR NEXT