உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கும் கும்பமேளா திருவிழாவுக்கு வரும் பக்தர்களில் நாள்தோறும் குறைந்தபட்சம் 10 முதல் 20 பேர் வரை கரோனா பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதால் தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது. இந்த கும்பமேளாவுக்கு உலகெங்கும் இருக்கும் இந்துக்கள் ஏராளமானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் இந்நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகள் இன்றி பக்தர்கள் கூடும்போது கரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்பட்டது.
இதையடுத்து, மத்திய சுகதாாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் மருத்துவர் சுஜித் குமார் சிங் தலைமையிலான மருத்துவர்கள் குழு கடந்த 16 மற்றும் 17-ம் தேதிகளில் உத்தரகாண்ட் மாநிலத்துக்குச் சென்று கும்பமேளா நடக்கும் ஹரித்துவார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை ஆய்வு செய்தனர்.
கும்பமேளா திருவிழாவுக்கு மாநில அரசு எவ்வாறு தயாராகியுள்ளது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றன, சுகாதாரத்துறை எவ்வாறு தயாராகியுள்ளது என்பதை மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், கும்பமேளா நிகழ்ச்சிக்காக தற்போது வரும் பக்தர்களில் நாள்தோறும் குறைந்தபட்சம் 10 முதல் 20 பேர் வரை குறைந்தபட்சம் நாள்தோறும் பாதிக்கப்படுகிறார்கள். உள்ளூர் மக்களும் 20 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மத்தியக் குழுவினர் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷானுக்கும், உத்தரகாண்ட் தலைமைச் செயலாளர் உத்பால் குமார் சிங்கிற்கும் கடிதம் எழுதி மத்தியக் குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில், "மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், பக்தர்களுக்கு கரோனா தடுப்பு விழிப்புணர்வு புகட்ட வேண்டும், அதற்காகப் பல்வேறு இடங்களில் கரோனா விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும்.
கரோனா அறிகுறிகள் என்ன, லேசான அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும், பரிசோதனை விவரம், கரோனா பாதிப்பு அதிகரித்தால், பரிசோதனையை அதிகப்படுத்துதல் போன்றவற்றை தீவிரமாக சுகாதாரத்துறையினர் கடைப்பிடிக்க வேண்டும்.
30 நாட்கள் நடக்கும் திருவிழாவில், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் அடிக்கடி கரோனா பரிசோதனை நடத்த வேண்டும், குறிப்பிட்ட இடத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தால், மக்களிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் மத்தியக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.